இலங்கை பெண்ணை படகில் அழைத்து வந்த மீனவர்களுக்கு சிறை: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவுக்கு சென்ற மீனவர்கள் திரும்பி வரும்போது இலங்கைப் பெண்ணை படகில் ஏற்றி வந்ததற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 பேர் தேவதாஸ் என்பவருக்கு சொந்தமான படகில் கச்சதீவுக்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் மாலை ராமேஸ்வரம் திரும்பி வரும்போது இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த உஷா என்ற பெண்ணையும், அவரது மகள் நீராவையும்(4) தங்கள் படகில் அழைத்து வந்தனர்.
இதையடுத்து தாய், மகள், படகில் இருந்த பாண்டி, குமரேசன், ஆயுதபூஜை, முனியசாமி, படகோட்டி கண்ணன் ஆகியோரை கடலோர காவற்படையினர் கைது செய்து நேற்று ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். உஷாவையும், நீராவையும் திருச்சி சிறையிலும் மற்ற 5 பேரை மதுரை சிறையிலும் அடைக்க மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மதுரை மற்றும் திருச்சி சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் 5 மீனவர்களையும் விடுவிக்கும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லப்போவதில்லை என்று கூறினர்.












Click it and Unblock the Notifications