தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு திமுகவும் தான் காரணம்: வைகோ

இடைத் தேர்தல் நடக்கும் சங்கரன்கோவிலில் மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாரை ஆதரித்து கட்சியின் வைகோ தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
களப்பாகுளம், சீவலராயனேந்தல், நெடுங்குளம், திருமலைகொழுந்துபுரம், வேப்பங்குளம், ஆள்கொண்டார்குளம், செந்தட்டி, தளவாய்புரம், தாமஸ் நகர், நெசவாளர் காலனி, இலவன்குளம், புளியம்பட்டி, புளியம்பட்டி காலனி, என்.ஜி.ஓ. காலனி ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்து அவர் பேசுகையில்,
நான் கிராம மக்களை எந்த அளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் அழைத்தவுடன் ஓடோடி வருவான் இந்த வைகோ. சங்கரன்கோவில் இடைத்தேர்தலை இந்தியாவே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது.
அமைச்சர்கள் வருவார்கள், எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள். உங்களிடம் ஓட்டும் கேட்பார்கள். அப்புறம் போய் விடுவார்கள். ஆனால் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வர தயாராக இருக்கிறேன். அப்போது நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று நான் பார்க்க மாட்டேன்.
தமிழகம் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, மின்வெட்டுக்கு காரணம் அதிமுக அரசு என்று கூறியிருக்கிறார். அது தவறான தகவல்.
மின்வெட்டுக்கு திமுகவும் தான் காரணம். திமுக ஆட்சியில் மின் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்து பாழாக்கி விட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனை பிரச்சனை, இலங்கை தமிழர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழர் நலனுக்காக மதிமுக போராடி வருகிறது.
மக்கள் நலனுக்காக போராடி வரும் மதிமுக வை ஆதரியுங்கள். உங்கள் ஊர் முற்றத்தில் நின்று கேட்கிறேன். பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். தமிழக அரசியலில் சங்கரன்கோவில் தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது. அதை வைத்து நான் சொல்லவில்லை. மக்கள் முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது.
மதிமுக வேட்பாளர் நல்லவர், மக்களுக்காக போராடுவார். சட்டசபையில் உங்களுக்காக குரல் கொடுக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அதிமுக, தேமுதிக, திமுகவுக்கு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications