'தண்ணி' அடிப்பதற்காக 10 மாத பேரனை கடத்த உதவிய தாத்தா கைது!
திருச்சி: மது அருந்துவதற்கு பணம் இல்லாததால், தனது மகன் வயிற்றுப் பேரனை இன்னொருவர் கடத்திச் செல்ல உதவி செய்ததாக அந்தக் குழந்தையின் தாத்தாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகர் ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் அசோக் குமார். ரியல் எஸ்டேட் புரோக்கர். அவருக்கு சர்வேஸ்வரன் என்ற 10 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி காலை அசோக் குமாரின் தந்தை மாரிமுத்து நடைபயிற்சிக்கு செல்லும்போது குழந்தையையும் தூக்கிச் சென்றார். அப்போது அவர் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு மாரிமுத்துவுக்கு தெரிந்த வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர் கண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தார். உடனே மாரிமுத்து குழந்தையை வெங்கடேஷிடம் கொடுத்துவிட்டு மது அருந்தச் சென்றதாகக் கூறப்படுகின்றது. வெங்கடேஷ் குழந்தையை கண்ணனிடம் கொடுத்துள்ளார். மாரிமுத்து மது அருந்திவி்ட்டு வந்து பார்த்தபோது குழந்தையுடன் அந்த 2 பேரும் மாயமானது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்று நடந்ததைக் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அசோக் குமார் மற்றும் அவரது உறவினர்கள் வெங்கடேஷ் மற்றும் கண்ணனை தேடி அழைந்தனர். அப்போது ஓயாமரி சுடுகாடு அருகே வெங்கடேஷ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அவர்கள் அவரைப் பிடித்து அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து அசோக் குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷிடம் தீவிர விசராணை நடத்தினர். விசாரணையில் வெங்கடேஷ் கூறுகையில், நான் குழந்தையை கண்ணனிடம் கொடுத்தேன். இருவரும் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். அதன் பிறகு கண்ணன் குழந்தையுடன் மாயமாகிவிட்டார் என்றார்.
ஆனால் மாரிமுத்துவை தீவிரமாக விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் குடித்துவிட்டு மேலும் மது குடிக்க குழந்தையை வெங்கடேஷிடம் கொடுத்துள்ளார். அவரும் குழந்தையைப் பெற்றுக் கொண்டு மது வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மாரிமுத்து கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே குழந்தையை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடினர். இந்நிலையில் கண்ணனின் மனைவியிடம் விசாரித்ததில் அவருக்கு திருப்பூரில் இன்னொரு மனைவி இருப்பது தெரிய வந்தது. உடனே திருப்பூர் சென்று கண்ணனின் 2வது மனைவியை விசாரித்ததில் அவர் குழந்தை நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.35,000க்கு விற்றது தெரிய வந்தது.
போலீசார் கண்ணனின் 2வது மனைவி, புரோக்கர் பெண் மற்றும் குழந்தையை வாங்கிய பெண் ஆகிய 3 பேரையும் பிடித்து குழந்தையை மீட்டனர். ஆனால் கண்ணன் இன்னும் சி்க்கவில்லை. குழந்தையைப் பார்த்த அசோக் குமார் தம்பதி அதை வாரி அணைத்து முத்தமிட்டனர்.
பிடிபட்ட 3 பெண்களை கடந்த 12ம் தேதி இரவு திருச்சி ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு வந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். குழந்தையை வாங்கிய பெண்ணை விசாரித்ததில், அனாதை குழந்தை என்று சொன்னதால், நாமாவது வளர்க்கலாமே என்று நினைத்து அதை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் குழந்தையை வாங்கிய பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளது. அதனால் அந்த பெண் எதற்காக குழந்தையை வாங்கினார். குழந்தையை கடத்தும் கும்பலுக்கு விற்க முயன்றாரா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications