சங்கரன்கோவிலில் கருணாநிதி பேசும் மேடையை அகற்ற உத்தரவு: அழகிரி தலைமையில் திமுகவினர் முற்றுகை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் திமுக தலைவர் கருணாநிதி இன்று பேசவிருக்கும் பொதுக்கூட்ட மேடையை அகற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தலைமையில் திமுகவினர் மேடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். இன்று இரவு 7 மணிக்கு சங்கரன்கோவில் வடக்கு ரதவீதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினரான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யுனியன் முஸ்லிம் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுகின்றனர். இதற்காக அங்கு மேடை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் திமுக கூட்டம் நடத்த வடக்குரத வீதியில் மேடை அமைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி பரமசிவன் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சங்கரன்கோவில் நகரசபை ஊழியர்களை மேடையை அகற்றப்போவதாக தகவல் வெளியானது.
இது குறித்து தகவல் அறிந்த தென்மண்டல திமுக அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மேடை அமைக்கப்படும் இடத்திற்கு விரைந்து வந்தார். அவருடன் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம். மைதீன்கான், சுரேஷ்ராஜன், தமிழரசி, கீதா ஜீவன், ஹெலன் டேவிட்சன் எம்.பி. உள்பட பலர் வந்தனர். அவர்கள் அனைவரும் மேடை அமைக்கும் இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மேடை அமைக்கும் பணி தொடர்ந்தது.
இது குறித்து அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக பொதுக்கூட்டம் திட்டமிட்டாவறே வடக்கு ரதவீதியில் நடக்கும். அதற்காக நாங்கள் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளோம். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றெல்லாம் கூறி கூட்டத்தை நிறுத்த முடியாது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டார். தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மேடையை அகற்றவிட மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications