இது தான் மெஜாரிட்டி அரசின் லட்சணமா?: துரைமுருகன்

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சங்கரன்கோவிலில் நேற்று பிரச்சாரம் செய்தார். நேற்றிரவு சங்கரன்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,
இந்த தேர்தல் ஒன்றும் ஆட்சியை மாற்றியமைக்கக் கூடியதல்ல. இதில் அதிமுக ஜெயித்தாலும் அதற்கு புதிய வேகம் வந்துவிடாது, தோற்றாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது. நீங்கள் அதிமுகவுக்கு வாக்களித்தால் பத்தோடு பதினொன்றாக ஒரு உறுப்பினர் அந்த பக்கம் உட்காருவார். அப்படி ஒருவர் உட்கார்ந்தால் ஆட்சியின் செயல்பாடுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டது போலாகிவிடும்.
எங்கள் ஆட்சியை மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா மூச்சுக்கு 30 தடவை சொல்லிக் கொண்டிருக்கிறார். நாங்கள் மைனாரிட்டி அரசாக இருந்தாலும் மெஜாரிட்டி அரசுக்குள்ள கம்பீரத்தோடு கருணாநிதி ஆட்சி நடத்தினார். நாங்கள் யாருக்கும் ஒரு ரூபாய் வரி போடாமல் ஆட்சி நடத்தினோம். ஆனால் மெஜாரிட்டி அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளேயே சட்டசபைக்கு கூடத் தெரிவிக்காமல் ரூ.5,000 கோடி வரி போட்டார். அது தான் மெஜாரிட்டி அரசின் லட்சணமா. மைனாரிட்டி அரசு ஒன்றும் பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தவில்லை. அதை மெஜாரிட்டி அரசு தான் செய்தது.
மைனாரிட்டி அரசு ஆட்சியில் வெறும் 2 மணி நேரம் இருந்த மின்வெட்டு மெஜாரிட்டி அரசு ஆட்சியில் 12 மணி நேரமாக அதிகரித்துள்ளது. மைனாரிட்டி அரசு 13,000 பணியாளர்களுக்கு வேலை கொடுத்தது. ஆனால் மெஜாரிட்டி அரசு அவர்களை வீட்டுக்கு அனுப்பியது. இது தான் சாதனையா?.
வேண்டிய கட்சி, வேண்டாத கட்சி என்று கருணாநிதி என்றுமே பிரித்துப் பார்த்ததில்லை. இது அதிமுக வென்ற தொகுதி. இருப்பினும் இத்தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த நீதிமன்றம் வர உத்தரவிட்டவர் கருணாநிதி.
இது நெசவாளர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதி. நெசவாளர்களுக்காக 500 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது இங்கு வசிக்கும் நெசவாளர் ஒருவர் கூறுகையில், ஜெயலிலதா ஆட்சி வந்ததில் இருந்து இருளில் மூழ்கியுள்ளோம். நெசவு செய்ய முடியவில்லை. பசியால் சாவதைவிட தறியை விற்று கால் வயிற்று கட்சி குடிப்போம் என்றிருக்கிறார்.
ஒரு நெசவாளியை தறியை விற்று கஞ்சி குடிக்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது இந்த அரசு. அப்படிபட்ட ஆட்சிக்கு நீங்கள் ஒரு எச்சரிக்கை மணியடிக்க வேண்டாமா?
நான் நினைத்தது தான் சட்டம், நினைத்ததையெல்லாம் செய்வேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று ஜனநாயகத்திற்கு புறம்பான ஆட்சி நடத்தும் அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டாமா? எங்களுக்கு ஒரு எம்.எல்.ஏ. வருவதால் பெரிய பிரளயம் ஒன்றும் ஏற்பட்டுவிடாது. ஆனால் நீங்கள் மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்தால் ஓஹோ மக்கள் பஸ் கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டார்கள் போலும். அதனால் இனி மேலும் ஏற்றலாம் என்று ஏற்றுவாரே தவிர இறக்குவாரா? ஒரு முறை அதிமுகவை தோற்கடித்துக் காட்டுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications