தேர்வுக்கு படிக்க இரவில் மின்சாரம் அளிக்க வேண்டும் - பிரச்சாரத்தில் விஜயகாந்த் கோரிக்கை

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அத்தொகுதியில் உள்ள மேலநீலிதநல்லூர், கீழநீலிதநல்லூர், ஆயாள்பட்டி, மூவிருந்தாளி, தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், குருக்கள்பட்டி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் தற்போது 10 முதல் 15 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இது குறித்து முதல்வர் பேசிய போது, மின் தடையை நாங்கள் சரி செய்வோம் என்கிறார்.
ஆனால் வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் 15 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும்.
மாணவர்கள் இரவில் படித்தால் தான் அடுத்த நாள் காலையில் தேர்வு எழுத முடியும். எனவே இரவில் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான மின்சாரம் கொடுங்கள்.
எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார். அதனால் தான் அவர் தொடர்ந்து முதல்வராக இருந்தார். ஆனால் இன்றைய முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ மக்களை குறித்த சிந்தனை இல்லை.
நான் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றேன். அதன்பிறகு அத்தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன் அதன்பிறகு எனது கட்சி வேட்பாளரை நிறுத்திய போது, அவரும் அத்தொகுதியில் வெற்றிப் பெற்றார்.
சங்கரன்கோவில் தொகுதியில் மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை. எனவே தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிப் பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications