தஞ்சையில் அடகுக் கடையில் ரூ.1 கோடி தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
தஞ்சை: தஞ்சையில் அடகுக் கடையில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த பூலாங்குறிச்சியைச் சேர்ந்தவர் குமார்(32). அவர் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு கடைவீதியில் அடகுக் கடை நடத்தி வருகிறார். கடையின் மேல் மாடியில் அவர் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல அவர் கடையை பூட்டிவிட்டு மாடியில் உள்ள வீ்ட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் கடையைத் திறக்க கீழே வந்து பார்த்த போது கடையின் முன் பகுதியில் இருந்த இரும்பு கிரில்கள், ரோலிங் ஷட்டர், பூட்டுகள் ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் இங்கும் அங்குமாக சிதறிக் கிடந்தன. மேலும் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு 513 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.1.80 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) அமல்ராஜ், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் கிரி, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. அசோக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்பது உட்பட பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
