எதிர்க்கட்சிகளின் டெபாஸிட்டை காலி செய்து, அதிமுகவுக்கு வெற்றி தாருங்கள் - முதல்வர் ஜெயலலிதா

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை தீட்டி, மக்களிடையே எடுத்துச் செல்வது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம். இதற்கு மாறாக கடந்த கால திமுக ஆட்சியில் குடும்ப நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு திட்டங்களைத் தீட்டினர்.
அதிமுக பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை உயர்வு, காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் இணைப்பு, மாணவர்களுக்கு விலையில்லா மடி கணினி என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்தார்கள்.
அமைச்சராக இருந்த கருப்பசாமி இறந்ததால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நாளை (18ம் தேதி) நடைபெறுகின்றது. இதில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முத்துச்செல்வி, கருப்பசாமியை போன்று எளிமையாகவும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் நபராகவும் உள்ளவர்.
ஆனால் திமுக சார்பில் போட்டியிடுபவரோ, நில அபகரிப்பில் குற்றச்சாட்டப்பட்டவர். எனவே இதனை சீர்தூக்கிப் பார்த்து மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். திமுக உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications