எதிர்வரும் லோக்சபா தேர்தலை குறி வைத்து வெளியிடப்பட்ட பட்ஜெட்-சரத்குமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2012-13ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகள் பலவற்றை பூர்த்தி செய்யாமல் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் அமைந்த ரயில்வே பட்ஜெட்டை அடுத்து, பொது பட்ஜெட் மூலமாக மத்திய அரசு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளது.
நேர்முக வரிகளில் சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு சலுகைகள் வழங்குவது போல் அறிவித்துவிட்டு, அதைவிட 10 மடங்கு அதிகமாக ரூ.45 ஆயிரத்து 940 கோடிக்கு மறைமுகமாக வரிகளை திணித்து தொழிலதிபர்கள், வியாபாரிகள், நுகர்வோர், முதலீட்டாளர்கள் என்ற எந்த தரப்பையும் முழுமையாக திருப்திப்படுத்தாத பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழ்நிலையிலும், கடந்த 2 ஆண்டுகளாக இருந்த வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதத்தில் இருந்து நடப்பாண்டில் 6.9 சதவீதமாக குறைந்திருக்கும் சூழ்நிலையிலும், நிதிப்பற்றாக்குறையை 5.9 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையிலும் வளர்ச்சிக்கு வழிகாட்டும் விதமாக பட்ஜெட் அமையாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
வருமானவரியை பொறுத்தமட்டில் தற்போதைய பணவீக்கம், விலைவாசி உயர்வு இவற்றோடு ஒப்பிடுகையில், தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் உச்ச வரம்பு மிகவும் குறைவு. அதிலும் ஆண்களுக்கு கிடைத்திருக்கும் சலுகைகளை விட பெண்களுக்கு குறைவாக உள்ளது.
தனி நபர் வருமானவரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தினால் தான், நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதை பலமுறை வலியுறுத்தி உள்ளேன். சேவை வரிகளை மேலும் பல துறைகளுக்கு விரிவுப்படுத்தி இருப்பது நுகர்வோருக்கு மேலும் நிதிச்சுமையை அதிகரிக்கும். விலைவாசி உயர்வுக்கும், பணவீக்கம் அதிகரிப்பதற்கும் வழிகாட்டுவதாக அமையும்.
விவசாய கடன் வழங்குவதற்கு ரூ.1 லட்சம் கோடி உயர்த்தி, ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடி என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாய கடன் உதவி விவசாய உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் கை கொடுக்கும் என்றாலும், விவசாய தொழிலில் இன்றைய தலைமுறையை பெருமளவில் ஈடுபட வைப்பதற்கும் அதன்மூலம் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.
ரூ.2 லட்சத்திற்கு மேலான தொகைக்கு வாங்கப்படும் தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விதிப்பு சாதாரண நடுத்தர மக்களை பாதிக்கும். நமது கலாச்சாரத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தங்கநகை வாங்குவது அவசியமானது. இன்றைய விலைவாசி நிலவரப்படி ரூ.2 லட்சத்திற்கு நகை வாங்குவது என்பது தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் புதிய வரிவிதிப்பு மக்கள் மீது சுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும்.
பொதுவாக வரி விதிப்பு அதிகரிக்கும்போது, பில் போடாமல் தவிர்ப்பது போன்ற சட்ட விரோத செயல்கள் மூலம் வரி ஏய்ப்புகளுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். அது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு கறுப்பு பணப்பெருக்கத்திற்கும் வழி வகுக்கும்.
அடுத்த நிதியாண்டில் பட்ஜெட்டை அடுத்து நடைபெற உள்ள பொதுத் தேர்தலை மனதில் கொண்டு இந்த ஆண்டே வரிகளை உயர்த்தி அடுத்த பட்ஜெட்டில் வரிகளை குறைத்து மக்களை கவரும் நோக்கில் மத்திய அரசு தற்போதைய வரி கூட்டிய பட்ஜெட்டை அறிவித்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதன் மூலம் மக்களின் வாழ்வாதார உயர்வு இவையே பட்ஜெட்டின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ரூ.46 ஆயிரம் கோடி அளவிற்கு வரிச்சுமையை மக்கள் மீது ஏற்படுத்தி இருக்கும் மத்திய அரசு இவற்றை கருத்தில் கொள்ளாதது கண்டனத்திற்குரியது. மொத்தத்தில் மக்களுக்கு மனநிறைவை தராத மத்திய அரசின் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்றே கூறலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications