காதல் பிரச்சனையில் வாலிபர் கடத்தி கொலை வழக்கு: பாமக முன்னாள் கவுன்சிலர், மனைவி கைது
சென்னை: மகளை காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் பாமக கவுன்சிலர், அவரது மனைவி உடன் மங்களூரில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மயிலாப்பூரை அடுத்த ஆர்.கே.மடம் சாலை, பிள்ளையார்தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்தவர் பிலால்(27). டெய்லரிங் மற்றும் கார் டிரைவிங் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மந்தைவெளி ரயில் நிலையம் அருகே பிலால் உடல் முழுவதும் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அபிராமபுரம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பிலால், பாமக கவுன்சிலர் மணிவண்ணனின் மகள் திவ்யாவை காதல் திருமணம் செய்ததும், பின்னர் பிலாலிடம் இருந்த திவ்யா பிரித்து அழைத்து செல்லப்பட்டதும் தெரிய வந்தது.
ஆனால் திவ்யா உடனான காதலை புதுப்பிக்க பிலால் மீண்டும் முயன்ற வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் மணிவண்ணன் கூலிப்படையை வைத்து பிலாலை கொலை செய்தது தெரிய வந்தது. கொலை வழக்கில் சிக்காமல் இருக்க, கடந்த 11ம் தேதியே மணிவண்ணன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் தலைமறைவாகிவி்ட்டார்.
இதனையடுத்து தலைமறைவான மணிவண்ணனையும், பிலாலை கொலை செய்த கூலிப்படையையும் போலீசார் தேடி வந்தனர். இதற்காக இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் புகழேந்தி தலைமையிலான 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பெங்களூர், திருப்பதி என்று இடத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்த மணிவண்ணன், இறுதியாக மங்களூரில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மங்களூர் சென்ற தனிப்படை போலீசார், அங்கு தலைமறைவாக இருந்த மணிவண்ணனையும், அவரது மனைவியும் கைது செய்தனர். இவர்களை இன்று சென்னைக்கு கொண்டு வந்த விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
இவ்வழக்கில் பிலாலை கொலை செய்ய மணிவண்ணன் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கூலிப்படையை நியமித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து மணிவண்ணனிடம் விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
