பியாந்த்சிங் கொலை வழக்கில் குற்றவாளிக்கு 31-ல் மரண தண்டனை நிறைவேறுமா?
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பல்வந்த்சிங் ராஜோனாவுக்கு வரும் 31-ந் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. ஆனால் பாட்டியாலா சிறையில் தூக்கிலிடும் பணியை செய்துவந்தவர் பணியிலிருந்து விலகிய நிலையில் ராஜோனாவின் தூக்கு தண்டனை நிறைவேறுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி, மனித வெடிகுண்டு மூலம் பியாந்த்சிங் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய பல்வ்ந்த்சிங் ராஜோனாவுக்கு மரண தண்டனை விதித்து, கடந்த 2007-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வருகிற 31-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மத்திய சிறையில் பல்வந்த்சிங்கை தூக்கிலிட வேண்டும் என்று சண்டிகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கை எதிர்நோக்கி உள்ள பல்வந்த்சிங், தனது இறப்புக்கு பிறகு, தனது கண்களை சீக்கிய பொற்கோவிலில் உள்ள, கண் பார்வையற்ற லக்விந்தர்சிங் என்ற மத குருவுக்கு பொருத்த வேண்டும் என்றும், தனது உடல் உறுப்புகளை தேவையானவர்களுக்கு பொருத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதம், சீக்கியர்களின் உயர் அமைப்பான அகால் தக்த்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தூக்கை நிறைவேற்றுவதில் சிக்கல்
இதனிடையே சீக்கியர் உயர் அமைப்பான அகால்தத் நிர்வாகிகள் பாட்டியாலா சிறையில் ராஜோனாவை சந்தித்துப் பேசினர். தூக்குத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை நிராகரித்த ராஜோனா தாம் தூக்கு மேடை ஏறத் தயார் என்றார்.
இருப்பினும் பாட்டியாலா நீதிமன்றத்தில் தூக்கிலிடும் பணியில் இருந்த நபர் திடீரென பணியிலிருந்து விலகிக் கொண்டார். இதனால் ராஜோனாவின் தூக்குத் தண்டனை நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராஜோனா மீது பாட்டியாலாவில் 20 கிலோ ஆர்.டி.எக்.ஸ் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால் அவரை தூக்கிலிட முடியாது என்று பாட்டியாலா சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களின் தனிநாடு கோரிக்கைக்காக நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை சீக்கிய மண்ணில் தூக்கிலிட சீக்கிய்ர்கள் எவருமே முன்வரவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications