தேசிய தீவிரவாத தடுப்பு மையம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது அல்ல: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: தேசிய தீவிரவாத தடுப்பு மையமானது கூட்டாட்சி தத்துவத்தை அழிப்பதாக இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மன்மோகன்சிங் பேசியதாவது:
தீவிரவாதத்துக்கு எதிராக நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரிசா மாநிலத்தில் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகள் 2 பேரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருப்பது இடதுசாரி தீவிரவாதத்தை வெளிப்படுத்துகிறது.
தீவிரவாதத்துக்கு எதிராக நாம் ஒற்றுமையுடன் இருக்காவிட்டால், நமது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும். இதற்கு ஒரிசாவில் நிகழ்ந்துள்ள கடத்தல் சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம். மத்திய அரசு ஏற்படுத்தும் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக சொல்கிறார்கள்.
கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல..
கூட்டாட்சியை அழிக்க மத்திய அரசு முயல்வதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது சரியானது அல்ல. அரசியலமைப்பு கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் எதுவும் செய்யப்படமாட்டாது. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது அல்ல. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருகிற 16-ந் தேதி டெல்லியில் முதல்வர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றார் அவர்.
மாநிலங்களவையில் அரசு தப்பியது
இந்நிலையில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கொண்டுவந்த திருத்த தீர்மானம் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் திருத்த தீர்மானம் நிறைவேறுமோ என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரசின்
வெளிநடப்பால் திருத்த தீர்மானம் தோல்வியடைந்தது.












Click it and Unblock the Notifications