புதுவையில் அதிமுக பந்த்: கடைகள் அடைப்பு – தனியார் பஸ்கள் நிறுத்தம்
புதுச்சேரி: ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி புதுச்சேரியில் அதிமுக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் ஓடவில்லை.
இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறலை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழகம், புதுச்சேரியில் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கை விவகாரத்தில் மவுனம் காக்கும் புதுவை அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் புதுவையில் புதன்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழர் களம், செந்தமிழர் இயக்கம், அகில இந்திய மாணவர் மறுமலர்ச்சி இயக்கம், புரட்சிகர சோஷலிஸ்டு, புதுவை மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
திட்டமிட்டபடி புதன்கிழமை காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியதை அடுத்து அதிகாலையில் இருந்தே தனியார் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோ, டெம்போக்கள் ஓடவில்லை. ஆனால் புதுவை அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுவை அரசின் டவுன் பஸ்கள், கிராமப்புறம் செல்லும் பஸ்கள், அண்டை மாநில பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதே போல் தமிழ்நாட்டில் இருந்து புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களும், விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் புதுவை பேருந்து நிலையம் வந்து சென்றன. தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் வருகை குறைந்த அளவே இருந்தது.
மத்திய மற்றும் மாநில அரசின் அலுவலகங்களும் இயங்கின. நகரம் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடிக்கிடந்தன.
பெரிய மார்க்கெட், சின்ன மணிக்கூண்டு, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, நெல்லித் தோப்பு சிறிய மார்க்கெட்டுகள் மூடிக்கிடந்தன. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் சாலைகள் மூடிக்கிடந்தன. போராட்டத்தை ஒட்டி நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications