சங்கரன்கோவிலில் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்ட தமிழகத்தின் 2வது பெரிய கட்சி... தேமுதிக !

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக, அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள 2வது பெரிய கட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் தேமுதிக சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2வது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல், 3வது இடத்திற்கும் போக முடியாமல் நான்காவது இடத்திற்கு அது தள்ளப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த இடைத் தேர்தல்கள் அனைத்திலும் திமுக வென்றிருந்தாலும் கூட பிரதான எதிர்க்கட்சியாக அப்போது இருந்த அதிமுக பெரும்பாலும் 2வது இடத்தைப் பிடித்து ஒரு எதிர்க்கட்சியாக தனது நிலையை உறுதிப்படுத்தியிருந்தது. பென்னாகரத்தில் மட்டுமே அது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டைப் பறி கொடுத்தது.

ஆனால் அதிமுக ஆட்சியில் நடந்துள்ள இந்த 2வது இடைத் தேர்தலில், முதல் முறையாக தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 2 அல்லது 3வது இடத்தைப் பிடிக்க முடியாமல் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்தது 3வது இடத்தையாவது பிடித்து மதிமுகவை விட நாங்கள் பெரிய கட்சி என்று தேமுதிக நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதைக் கூட அக்கட்சியினர் பொய்த்து விட்டனர்.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை தனித்தே போட்டியிட்டு வந்தது தேமுதிக. அதில் கணிசமான வாக்குகளை, குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டைப் போட்டது மட்டுமே அதன் பெரிய சாதனையாக இருந்தது. கணிசமான வாக்கு வங்கியை தனக்கென உருவாக்கிக் கொண்ட விஜயகாந்த், அதை மேலும் பலப்படுத்த முயலாமல், கூட்டணி அரசியலுக்குள் புகுந்து விட்டார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார்.

அதிமுகவின் ஓட்டு வங்கி புண்ணியத்தால் தேமுதிகவுக்கு எதிர்பாராத அளவுக்கு எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக நம்பர் டூ இடத்தைப் பிடித்தது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்தார். பாரம்பரியமாக இருந்து வந்த, திமுக அல்லது அதிமுக என்ற நிலை மாறி தேமுதிக அந்த இடத்திற்குள் புகுந்தது. திமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும் தேமுதிகவுக்குக் கிடைத்த வெற்றி அதிமுகவுடன் கூட்டு சேர்ந்ததால்தான் என்று அத்தனை பேரும் அடித்துப் பேசினார்கள். ஆனால் அதை தேமுதிகவினர் மட்டும் ஏற்க மறுத்தனர். இந்த உட்பூசல், பின்னர் சட்டசபையில் பெரும் போராக வெடித்தது.

தேமுதிகவை கடுமையாக சாடிப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, கடும் மின்வெட்டு இவற்றுக்கு மத்தியிலும் நாங்கள் சங்கரன்கோவிலில் தனித்து நின்று மக்களை சந்திக்கப் போகிறோம். அதே போல தனித்து நின்று போட்டியிட்டு வெல்லும் திராணி உங்களுக்கு இருக்கிறதா என்று விஜயகாந்த்தைப் பார்த்து நேருக்கு நேர் சவால் விட்டார். அதன் பிறகு சட்டசபையில் ஏற்பட்ட அமளி நாடறிந்தது.

அந்த சவால் மற்றும் சண்டை காரணமாக சங்கரன்கோவில் இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் தேமுதிக தரப்பினர் இந்த சவாலை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. இயல்பான அளவிலேயே அவர்களது பிரசாரம் இருந்தது. விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும், மச்சான் சுதீஷும் தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அனல் கிளப்பும் வகையில் பேசவில்லை. வழக்கமான பேச்சாகவே இருந்தது.

இந்த இடைத் தேர்தலில் மதிமுக மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மதிமுகவைத் தாண்டி தேமுதிக வருமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் அதை தற்போது தேமுதிக நிறைவேற்றத் தவறி விட்டது. 4வது இடத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் இருக்கிறார்.

வெற்றி கிட்டாவிட்டாலும் கூட அதிமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய அளவுக்குக் கூட தேமுதிகவின் செயல்பாடுகள் சங்கரன்கோவிலில் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

யாருக்கு எப்படியோ, சங்கரன்கோவில் முடிவு, நிச்சயம் தேமுதிகவுக்கு பெருத்த ஏமாற்றம் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+