சங்கரன்கோவிலைப் போல லோக்சபா தேர்தலிலும் 'லோன்லி'யாக நிற்குமா அதிமுக?

லோக்சபாவுக்கு 2014ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இது முன்கூட்டியே நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே அதற்கேற்ப அத்தனைக் கட்சிகளும் இப்போதே வியூக வகுப்பில் தீவிரமாகியுள்ளன.
கூட்டணி அமைப்பது குறித்தும் ஒரு பக்கம் கட்சிகளுக்கிடையே ரகசியப் பேச்சுக்கள் நடந்து வந்தாலும், தங்களது நிலையை முதலில் ஸ்திரப்படுத்திக் கொள்வதில் பிராந்தியக் கட்சிகள் முதல் தேசியக் கட்சிகள் வரை அத்தனையும் மும்முரமாக உள்ளனவாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை லோக்சபா தேர்தலில் கூட்டணி மாற்றம் என்பது நிச்சயமாகி விட்டது. யார் யாருடன் போகப் போகிறார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக மற்றும் அதிமுக தலைமையில் அமையப் போகும் அணி எது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை அதிமுக அணியில் இருந்த கட்சிகள் கிட்டத்தட்ட அத்தனையும் தற்போது தனியாகப் போய் விட்டன. குறிப்பாக தேமுதிக விரட்டப்பட்டு விட்டது. இந்தக் கட்சியை கூட்டணிக்குள் வாரியிழுத்து கட்டி அணைக்க திமுக தரப்பு தயாராகவே உள்ளது. ஆனால் விஜயகாந்த் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் விபரீதமான ஒரு கருத்து ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதாவது சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டதைப் போல லோக்சபா தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டால் என்ன என்பதுதான் அந்த எண்ணம்.
சங்கரன்கோவிலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு பெரும் வெற்றியைப் பெற்றது. பண பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை இதற்கு முக்கியக் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது - மக்கள் மத்தியிலும் கூட. இருப்பினும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அத்தனை வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கவைத்திருப்பதை அதிமுகவினர் பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனராம்.
மேலும் அதிமுக ஓட்டு வங்கி அதிகரித்திருப்பதும் அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாம். திமுக, தேமுதிக, மதிமுக என பலம் வாய்ந்த கட்சிகள் தங்களை எதிர்த்தும் கடைசியில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போய் விட்டார்கள் என்று கூறும் அதிமுகவினர், மின் தடைகள், பால் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு என பல பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பொருட்படுத்தவில்லை என்பதை தங்களுக்குச் சாதகமானதாக கருதிக் கொண்டு பேசுகிறார்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை அதிமுக அரசு முறைப்படி நிறைவேற்றி வருவதை மக்கள் கவனித்து வருகிறார்கள் என்பதையே இது காட்டுவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
கட்டண உயர்வு, மின் பற்றாக்குறை ஆகியவை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அளித்த விளக்கம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, லோக்சபா தேர்தலிலும் தனியாகவே போட்டியிடலாம் என்று அதிமுக தலைமையும் யோசித்து வருவதாக தெரிகிறது.
அதிமுக இந்த முடிவுக்கு வர முக்கியக் காரணம், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளும் தற்போது தோய்ந்து போய் விட்டன. தேசிய அளவில் பிராந்தியக் கட்சிகள் எழுச்சி பெற்று வருகின்றன, திமுகவிலும் உட்கட்சிப் பூசல் ஏகபோகமாக இருப்பதால் அங்கும் முகாம் குழம்பிக் கிடக்கிறது, விஜயகாந்த் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துத்தான் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை ஆகியவையும் கூட அதிமுக தனித்துப் போட்டியிடும் யோசனைக்கு வரமுக்கியக் காரணமாம்.
முன்பு போல பாமகவும் சரி, தேமுதிகவும் சரி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இல்லை என்று அதிமுக தலைமைக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதாம். எனவே திமுகவை மட்டுமே அதிமுக சமாளிக்க வேண்டியதிருக்கும். பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் முடக்கி விட்டால், லோக்சபா தேர்தலின்போது திமுகவை சமாளிப்பதும் எளிதாகவே இருக்கும் என்று கணக்குப் போடுகிறார்களாம் அதிமுகவினர்.
சங்கரன்கோவில் ஒரு தொகுதி, 32 அமைச்சர்களையும் களம் இறக்கி வெற்றி கண்டாகி விட்டது. ஆனால் 39 தொகுதிகளைக் கொண்ட தமிழக லோக்சபா தேர்தலில் அதிமுகவின் திட்டம் பலிக்குமா, செயலுக்கு வர முடியுமா என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே அதுவரை 'கெஸ்' செய்து கொண்டு காத்திருப்போம்...!












Click it and Unblock the Notifications