எனக்கு "இந்திய" தலைவர்களின் கருணை தேவையில்லை- தூக்கிலிடுங்கள்: பியாந்த்சிங் கொலையாளி
பாட்டியலா: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த்சிங் ரஜோனா தமக்கு யாரும் கருணை காட்டத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
ரஜோனாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகல் தத் வலியுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து சிரோன்மணி அகாலி தளமும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தது.
ஆனால் "இந்திய" தலைவர்களின் கருணையை தாம் நிராகரிப்பதாக பல்வந்த்சின் ரஜோனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சகோதரி கமல்ஜித் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அகாலிதளம்- பாரதிய ஜனதா கூட்டணி அரசு மற்றும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி ஆகியவை என்னுடைய தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதை நாளிதழ்களில் பார்த்தேன்.
நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.... இந்திய அரசாங்கத்தின் தலைவர்களின் எனக்கு கருணை காட்டுவதை நான் விரும்பவில்லை. நான் இந்தியாவை ஏற்றுக்கொள்ளவில்லை.
சிரோன்மணி அகாலிதளத் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் சீக்கிய மதத்தை ஏமாற்றியவர்கள். டெல்லியில் உள்ள மத்திய அரசின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து சீக்கிய மதத்தின் அடிப்படை கொள்கைகளிலிருந்து விலகிவிட்டனர்.
1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சீக்கிய குடும்பங்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய நீதியை அகாலிதள தலைவர்கள் மறுத்துவிட்டனர். இத்தகைய தலைவர்களால் சீக்கியர்களுக்கான நீதியை பெற்றுத்தந்துவிட முடியாது.
இத்தகைய தலைவர்கள் தங்களது நீலநிர டர்பன்களைக் கழற்றிவிட்டு காக்கி டவுசரையும் வெள்ளைத் தொப்பியையும் அணிந்து கொள்ளலாம். என்னுடைய நோக்கத்தை காங்கிரசும் பாரதிய ஜனதாஅவும் அரசியலாக்க முயற்சிக்கின்றன.
எனக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என்ற பியாந்த்சிங் குடும்பத்தினரின் கருத்துகளை நிராகரிக்கிறேன். நான் செய்த செயல் (பியாந்த்சிங் படுகொலை) நியாயமானதே.
என்னைத் தூக்கிலிடும் நாளில் சமூக அமைதிக்கு எந்த ஒரு பங்கத்தையும் யாரும் ஏற்படுத்திவிட வேண்டாம். என்னுடைய கொள்கை நிறைவேற வேண்டும் என்பதை வலியுறுத்தி சீக்கியர்களுக்கே உரித்தான காவி நிறக் கொடியை எங்கும் பறக்கவிடுங்கள் என்று அதில் கூறியுள்ளார்.
பப்பர் கல்சா
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் 1995-ம் ஆண்டு மனிதவெடிகுண்டு மூலம் பஞ்சாப் மாநில தலைமைச் செயலகம் அருகே படுகொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு பப்பர் கல்சா என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
தற்போது தூக்குமேடையில் நிற்கும் பல்வந்த்சிங் ரஜோனாவும் பப்பர் கல்சா இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்த இயக்கத்தின் நோக்கம், இந்திய அரசிடமிருந்து பஞ்சாப் மாகாணத்தை பிரித்து தனிநாடாக்குவது என்பதாகும். இந்த அமைப்பின் செயல்பாடுகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுள்ளது.
தூக்கிலிட பஞ்சாப் அரசு மறுப்பு
இதனிடையே ரஜோனாவை தூக்கிலிடப் போவதில்லை என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநில சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் இதனைத் தெரிவித்துள்ளார். ரஜோனாவுக்கு கருணை காட்ட வேண்டும் என்ற சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் கோரிக்கையை ஆதரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் ஆர்ப்பாட்டம்
மேலும் ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர்மந்தரில் நூற்றுக்கணக்கானோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரஜோனாவுக்கு கருணை காட்ட் வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications