உபரி வருவாய் ரூ.2,376 கோடியாம்.. ஆனால், ரூ.1,500 கோடிக்கு புதிய வரிகள் போடுவார்களாம்: விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: நடப்பு நிதியாண்டில் உபரி வருவாய் ரூ.2,376 கோடி எனில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,500 கோடிக்கு புதிய வரிகள் போடப்பட்டுள்ள ஏன்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாயை விட செலவு குறையும் என்றும், 2,376 கோடி ரூபாய் மிச்சம் ஆகும் என்றும் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, கூடுதல் வருவாயை திரட்டுவதற்காக, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் ஏன் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஏற்கனவே பால், பஸ் கட்டண உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு குறைந்தபட்சம் கட்டண சலுகையாவது அளித்திருக்கலாம்.

பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகும், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை ஒரளவுதான் சீரடைந்துள்ளது என்றும், மேலும் அரசின் உதவி இந்நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வால் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

யானை வரும் முன்னே, மணியோசை வரும் என்பது போல் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு மின் கட்டண உயர்வு வர இருக்கிறது.

சொத்து வரியை சீரமைப்பதற்கு வாரியம், அமைக்கப் போவதாக அறிவித்துள்ளதால் சொத்து வரி உயரும் என்று எதிர்பார்க்கலாம். கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் கூடுதல் நிதி ஆதாரத்தோடு, இந்த ஆண்டும் தொடர்கிறது.

ஒரு சில மக்கள் நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், அரசின் பட்ஜெட் அறிக்கை என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம் ஆகிவிட்டதே தவிர மக்கள் சொந்த காலில், நிற்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், சரியான பொருளாதார கொள்கை பின்பற்றப்படவில்லை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதையே இந்த பட்ஜெட் நினைவூட்டுகிறது என்று கூறியுள்ளார்.

வளர்ச்சிக்கு வழி இல்லாத பட்ஜெட்-வைகோ:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1,500 கோடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 வழங்கிடுமாறு விவசாயிகள் வைத்த கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவது குறித்து அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

மாநில நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ரூ.50 கோடி என்பது, திட்டம் நடைமுறைக்கு வருமா? என்ற ஐயப்பாட்டையே எழுப்புகிறது.

மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கிடத் திட்டங்கள் எதுவும் இல்லை. விரைந்து வரும் நகர மயமாதலை எதிர்கொள்ளவோ, கிராமப்புறப் பகுதிகளின் வளர்ச்சிக்கோ திட்டங்கள் இல்லை. வேகமாக விரிவாக்கம் பெற்று வருகின்ற சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், கட்டி முடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக்கூடக் குடிதண்ணீரும் அளிக்கவில்லை. சாலைகளும் இல்லை; மின்விளக்குகளும் இல்லை.

ஒட்டுமொத்தத்தில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, வளர்ச்சிக்கு வழி இல்லாத நிதிநிலை அறிக்கையாகவே அமைந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

சுய தம்பட்டம்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்த போதும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்காத அறிக்கையாகவே உள்ளது.

தமிழக அரசின் 2012-2013ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை புதிய முயற்சிகளும், திட்டங்களுமின்றி கடந்த காலத்தைப் போலவே சில வெற்று வாக்குறுதிகளும், சுய தம்பட்டமும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு எவ்வித தீர்வையும் முன்வைக்காததாகவும் அதே சமயம் புதிய தாராளமயக் கொள்கைகளை அடிபிசகாமல் பின்பற்றுவதாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நன்றி நன்றி நன்றி நன்றி-சரத்குமார்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் வளர்ச்சியையும், எய்த வேண்டிய இலக்குகளையும் மனதில் கொண்டு, ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் அறிவித்த 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023' சிறப்பாக நிறைவேற இன்றைய பட்ஜெட் நல்லதொரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

இயற்கை இடர்பாடுகளில் பேரிடர் நேரிடும்போது விரைவாகவும், திறமையாகவும் செயல்படக்கூடிய சிறப்பு பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்டுப்படை ஏற்படுத்த இருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். தனியார் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக 32 மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு திறன் உருவாக்கும் பயிற்சியும், திறன் மேம்பாட்டுப்பயிற்சியும் அளிக்க இருப்பது வரவேற்கத்தக்கது. வேளாண் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.3,804.96 கோடி ஒதுக்கியிருப்பதும், வரும் நிதி ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 120 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பதும் சிறப்பு அம்சங்களாகும்.

மின் உற்பத்தியைப் பெருக்கி மின்பற்றாக்குறையை சமாளிக்க 1600 மெகாவாட் உடன்குடி அனல் மின் நிலையத் திட்டப்பணிகளை தொடங்குவதற்காக இந்த நிதியாண்டில் ரூ.1,500 கோடி ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தையும், சென்னையில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தையும் புதுப்பிக்கும் பணிகளை அரசு மேற்கொள்ள இருப்பதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விலையில்லாமல் வழங்கி வரும் தமிழக அரசு, இந்த ஆண்டு முதல் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்களையும் வழங்க இருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என்ற அடிப்படையில் முதல்வருக்கும், நிதியமைச்சருக்கும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+