அரசியலுக்கு நாங்கள் புதிதாய் வந்த கத்துக்குட்டிகள் அல்ல: ஸ்டாலினுக்கு ஜெயலலிதா பதில்

பட்ஜெட் தாக்கலான தினத்தன்று திமுக எம்எல்ஏக்களுடன் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், முன்பெல்லாம் பட்ஜெட் என்றால் ரகசியம் என்பார்கள். இப்போது பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகவே அவை மரபுகளுக்கு மாறாக முதல்வரே அரசின் திட்டங்களை எல்லாம் அவரே அறிவித்து விடுகிறார். இதன்மூலம் அவருக்கே இந்த பட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது. அவருக்கே நம்பிக்கை இல்லாததால், எங்களுக்கும் நம்பிக்கை இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.
இதுகுறித்து இன்று சட்டசபையில் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கமளித்து முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்ய முற்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் உறுப்பினர் மு.க.ஸ்டாலின், தனது கையில் வைத்திருந்த தாளிலிருந்து எதையோ படித்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுகவினர் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், வெளியில் சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், 'முன்பெல்லாம் ‘பட்ஜெட்’ என்றால் ரகசியம் என்பார்கள், இப்போது பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகவே, அவை மரபுகளுக்கு மாறாக முதலமைச்சரே அரசின் திட்டங்களை எல்லாம் அவரே அறிவித்து விடுகின்ற கூத்து தமிழகத்திலே நடைபெறுகிறது. உதாரணமாக, மார்ச் 26ம் தேதி பட்ஜெட் என்று அறிவித்துவிட்டு, 24ம் தேதி நாளிதழ்களிலேயே முதல்வர் அறிவித்ததாக பல்வேறு திட்டங்கள் வெளியிடப்பட்டன. உதாரணமாக, காவல் துறையை அதிநவீனமாக்க 34 கோடி ரூபாய்க்கு முன்னோடித் திட்டங்கள், போடியில் 94 கோடி ரூபாயில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி என்பன போன்ற அறிவிப்புகளை முதலமைச்சரே செய்துவிட்ட பிறகு, அவருக்கே இந்த பட்ஜெட் அறிக்கையின் மீது நம்பிக்கை இல்லை என்ற அளவில், எங்களுக்கும் நம்பிக்கை இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளி நடப்பு செய்திருக்கிறோம்'என்று கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றி திமுகவிற்கே உரித்தான சில மரபுகள், கோட்பாடுகள் உண்டு. சட்டமன்றப் பேரவையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளான ஆளுநர் உரை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் அளிக்கும் பதிலுரை, பட்ஜெட் அறிக்கை தாக்கல், பட்ஜெட் அறிக்கையின் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் அவர்களின் பதிலுரை, காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சரின் பதிலுரை போன்ற முக்கிய நிகழ்வுகளை எல்லாம் புறக்கணிப்பது என்பது தான் திமுகவினர் காலம் காலமாக கடைபிடிக்கும் மரபு.
திமுகவினருக்கே உரிய இந்த மரபை ஒட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தற்போதைய ஆளுநர் டாக்டர் ரோசைய்யா தனது முதல் ஆளுநர் உரையை படிக்க ஆரம்பித்த போதே, அரசு ஏற்கெனவே எடுத்த சில முடிவுகள் பற்றி விமர்சனம் செய்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
தற்போது அவ்வாறு எதுவும் விமர்சனம் செய்ய இயலாத சூழ்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டவாறே, சங்கரன்கோயில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதிமுக ஆட்சியையும், கருணாநிதி தலைமையில் நடைபெற்ற முந்தைய திமுக ஆட்சியையும், எடை போட்டுப் பார்த்து, டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுகவிற்கு விடை கொடுத்து விட்ட நிலையில், தாங்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வெளியேறும் மரபை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக உண்மைக்குப் புறம்பான ஒரு காரணத்தைச் சுட்டிக்காட்டி மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
மு.க. ஸ்டாலின் வெளிநடப்பு செய்த காரணம் பற்றி, பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததை பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன.
கடந்த 23.3.2012 முதல் 25.3.2012 வரை சில திட்டங்கள் பற்றி வெளியிடப்பட்ட அரசாணைகள் குறித்து அரசின் செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. அரசு மேற்கொள்ளும் திட்டங்களை செய்திக் குறிப்பு வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது தான் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் முக்கியப் பணியாகும்.
அதை நிறைவேற்றிடும் வகையில், அரசாணை வெளியிடப்பட்ட திட்டங்கள் பற்றி செய்திக் குறிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றை ஏதோ புதிய திட்டங்கள் என்றும், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய, பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அறிவிப்புகள் முன்னதாகவே வெளியிடப்பட்டுவிட்டன என்றும் உண்மைக்கு மாறாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு செய்திக் குறிப்புகளில் காவல் துறைக்கு ரோந்து வாகனங்கள், கணினிகள், காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களுக்கு அமரும் வசதியை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 10 நாற்காலிகளை வழங்குதல் போன்றவைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தான் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. இவை எதுவுமே புதிய திட்டங்கள் அல்ல.
மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல், அரசின் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை அள்ளித் தெளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை இல்லாமல், அரசின் கொள்கை பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆளுநர் உரை, பட்ஜெட் அறிக்கை, கொள்கை விளக்கக் குறிப்பு ஆகிய எதையுமே சரியாக படிக்காமல் 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ'என்பதற்கேற்ப, மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளார் உறுப்பினர் ஸ்டாலின்.
அவை மரபுகளுக்கு மிக உயர்ந்த மதிப்பு அளிக்கின்ற அரசு எனது தலைமையிலான அரசு, விதிமுறைகளையும், மரபுகளையும் ஐயம் திரிபற தெரிந்து வைத்து அதன்படி நடக்கின்ற முதல்வர் தான் நான்.
சட்டமன்றத்திற்கோ, அரசியலுக்கோ நாங்கள் புதிதாக வந்த கத்துக்குட்டிகள் அல்ல. நான் மூன்றாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்று கடமை ஆற்றி வருகிறேன். சட்டமன்ற மரபுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.
உண்மை நிலைமை இவ்வாறிருக்க, சட்டமன்ற மரபுகளுக்கு மாறாக, புதிய அறிவிப்புகளை நான் வெளியிட்டேன் என்று பொறுப்புள்ள துணை முதல்வர் பதவியை வகித்த ஸ்டாலின் கூறியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறதா? அல்லது வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுக்களையும், களங்கத்தையும் எங்கள் அரசின் மீதும், என் மீதும் சுமத்துகிறாரா? என்பதை அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
எதிர்க்கட்சியாக இருந்த போதே, பேரவை மரபுகளுக்கு மாறாக 'பால் கமிஷன்' அறிக்கையை பத்திரிகைகளுக்கு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவூட்டுகிறேன் என்றார் ஜெயலலிதா.
திமுக வெளிநடப்பு:
இதற்கு விளக்கம் அளிக்க திமுக எம்எல்ஏக்கள் வாய்ப்பு கேட்டனர். அதற்கு சபாநாயகர் உங்கள் உறுப்பினர் பேசும்போது இதுபற்றிய விளக்கத்தை அளிக்கலாம் என்றார்.
தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று உடனே வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அனுமதி கிடைக்காததால் அவர்கள் ஸ்டாலின் தலைமையில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications