பெட்ரோல் விலையை உயர்த்தவிடலைனா சப்ளை பாதிக்கும்: மத்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
டெல்லி: பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் சப்ளை பாதிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி சர்வதேச நிலவரத்திற்கேற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து முடியும் வரை பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது.
ஆனால் தேர்தல் முடிந்து புதிய அரசுகள் பொறுப்பேற்ற பிறகும் பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ்.புடோலா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மீது 20 சதவீத விற்பனை வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் 7 ரூபாய் 67 காசு இழப்பு ஏற்படுகிறது. இதனால் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் நினைக்கின்றன.
டெல்லியில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9 ரூபாய் 20 காசு உயர்த்த விரும்புகிறோம். எங்களுடைய உற்பத்தி செலவில் 93 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தான் செலவு செய்கிறோம். பெட்ரோல் விற்பனையில் வருவாய் கிடைக்காவிடில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பெட்ரோல் சப்ளை பாதிக்கப்படும்.
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டால் உற்பத்தி வரியின் மூலம் மத்திய அரசுக்கு 14 ரூபாய் 78 காசும், மாநில அரசுகளுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரையும் கிடைக்கிறது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களை சம்பாதிக்க அனுமதிப்பதில்லை.
இந்த நிலைமையில் பெட்ரோல் விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.48 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது இழப்பை சரிகட்டவாவது நிதியுதவி வழங்க வேண்டும். பெட்ரோல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்கக் கோரியுள்ளோம். எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் பெட்ரோல் விலையை ஏற்றுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் இது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications