கூடங்குளம் போராட்டக்காரர்களை இன்று சந்திக்கும் சுவாமி அக்னிவேஷ்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வருபவர்களை சுவாமி அக்னிவேஷ் இன்று மதியம் சந்திக்கவிருக்கிறார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக கடந்த 7 மாதங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். முதலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்த தமிழக அரசு கடந்த மாதம் 19ம் தேதி அணு மின் நிலையத்தை உடனே திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து போராட்டத்தால் 6 மாத காலமாக மூடப்பட்ட அணு மின் நிலையம் அன்றே திறக்கப்பட்டு 300 பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டக் குழு தலைவர் உதயகுமார் உள்பட 15 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். இந்நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்டனர். ஆனால் இடிந்தகரையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று உதயகுமார் அறிவித்தார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். ஆனால் அதில் 2 பேருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்கள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் போராடுபவர்களை சுவாமி அக்னிவேஷ் இன்று பிற்பகல் 2 மணி அளவில் சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications