சத்துணவு அமைப்பாளராக பணியாற்ற அரசு விதித்திருந்த நிபந்தனை சரியானதே: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு மையம் அமைந்துள்ள 3 கி.மீட்டர் சுற்றளவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று சமூக நலத்துறை செயலாளர் கடந்த 18.8.2010 ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மகேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால்வசந்த குமார் அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சமூக நலத்துறை செயலாளர் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது.
அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, பள்ளி குழந்தைகளுக்கு நல்ல தரமான உணவை வழங்க வேண்டும். சத்துணவு பொருட்களை பாதுகாப்பது, பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளும் சத்துணவு அமைப்பாளர் பொறுப்பில்தான் உள்ளது. இதனால் சத்துணவு மையம் அமைந்துள்ள சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டது என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் குழந்தைகள் நலன் கருதி அரசு கொண்டு வந்த நிபந்தனை சரியானது என்றும், எனவே அந்த உத்தரவு செல்லும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications