தேமுதிகவுக்கு அங்கீகாரம்: முரசு சின்னமும் ஒதுக்கீடு- தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: 2008ம் ஆண்டு தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட 15 கட்சிகள் தங்களுக்கு இந்தந்த சின்னம்தான் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.
இதையடுத்து தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு மட்டும் இடைக் காலமாக அவர்கள் கேட்ட சின்னங்களை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தனிச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் சில விதிகளை வகுத்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி மற்றும் 6 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதி. இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதோடு தனிச் சின்னம் கோரிய அரசியல் கட்சிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
2008ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அடிப்படையில் தேமுதிகவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. காரணம், 2006ம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி 8.33 சதவீத வாக்குளைப் பெற்றாலும் ஒரு தொகுதியில் மட்டுமே (விருத்தாசலத்தில் விஜய்காந்த் மட்டும் வென்றார்) வெற்றி பெற்றது. ஆனால் 2011ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக முரசு சின்னத்தில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு 8.5 சதவீதம் வாக்குகளையும் பெற்றது.
இதனால் தேமுதிக அங்கீகாரம் பெறும் தகுதியைப் பெற்றுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில்,
தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி விட்டது. தனிச் சின்னம் பெற 6 சதவீத ஓட்டுகளும், 2 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற தகுதியையும் தேமுதிக பெற்றுள்ளது. அதனால் அக்கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து அதிமுக, திமுக, பாமகவைத் தொடர்ந்து தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 6 கட்சிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications