அம்பாசமுத்திரம்: ஒன்றாக பிறந்து விபத்தில் ஒன்றாகவே இறந்த இரட்டை சகோதரர்கள்!
விகேபுரம்: அம்பை அருகே பைக் மீது லாரி மோதியதில் இரட்டை சகோதரர்கள் பலியானார்கள்.
அம்பை அய்யனார்குளத்தைச் சேர்ந்தவர் ஞானகுரு. பீடிக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி சண்முக சுந்தரி. அவர்களது மகன்கள் ராம், லட்சுமணன்.
இரட்டை சகோதரர்களான அவர்கள் பாலிடெக்னிக்கில் படித்து வந்தனர். அவர்கள் தந்தைக்கு உதவியாக பீடிக்கடையை பார்த்து வந்தனர். இருவரும் ஒரே நிறத்தில் தான் சட்டை அணிவார்கள். பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்ததால் அதில் அண்ணன், தம்பி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் பிறர் குழம்புவார்கள்.
இந்நிலையில் நேற்றிரவு கல்லிடைக்குறிச்சிக்கு சகோதரர்கள் பைக்கில் சென்று விட்டு அம்பைக்கு திரும்பினர். அம்பை ஆற்றுபாலம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த சகோதரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் பலத்த காயமடைந்தனர். லட்சுமணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராம் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து மினி லாரி டிரைவர் பழைய பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஞானகுரு, சண்முக சுந்தரிக்கு ராம், லட்சுமணன் தவிர வேறு குழந்தைகள் கிடையாது. இருந்த இரண்டு மகன்களும் ஒரே நேரத்தில் இறந்தது அவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.
ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications