காவிரி நீர்: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: காவிரி நதியில் இருந்து கூடுதல் நீர் எடுக்கும் கர்நாடகத்தின் நடவடிக்கையை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
ஆனால், இதன் மீது உத்தரவு எதையும் பிறப்பிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை குறித்த தேதி குறித்து வரும் வெள்ளிக்கிழமை பார்க்கலாம் என்று கூறிவிட்டது.
வறட்சி காலமான ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை காவிரி நதி நீரை கர்நாடக அரசு பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு இந்த புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன், கோடை காலம் துவங்குவதற்கு முன்பாகவே கர்நாடகா அரசு கபினி அணை நீரை பயன்படுத்துகிறது. இதனால் தமிழகத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த ஆண்டு கர்நாடகம் ஏற்கனவே 29 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்தி விட்டது.
மேலும் காவிரி நதியிலிருந்து கர்நாடக அரசு கூடுதல் நீரைத் தேக்கி வைக்க முயல்கிறது. அதைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றார்.
இதை விசாரித்த நீதிபதிகள் டி.கே. ஜெயின், அனில் ஆர். தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரிக்க வேண்டும், மேலும் எங்கள் பெஞ்ச் முன் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் உள்ளன. அதனால், வெள்ளிக்கிழமை இதே கோரிக்கையுடன் மீண்டும் அணுகினால் பரிசிலிக்கிறோம் என்றனர்.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் முழு விவரம்:
நடுவர் மன்ற உத்தரவின்படி, காவிரி நதியில் இருந்து கோடை கால பாசனத் தேவைக்கு நீரை கர்நாடகம் பயன்படுத்தக் கூடாது. ஆனால், 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 42 டி.எம்.சி. அடி முதல் 72 டி.எம்.சி. அடி வரையில் நீரை மாநிலத்தின் நான்கு முக்கிய நீர்த் தேக்கங்களில் கர்நாடக அரசு தேக்கி வைத்துள்ளது.
இது நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணானது. நடுவர் மன்றத்தின் உத்தரவில், காவிரி நதி நீரைப் பயன்படுத்தும் மாநிலங்கள் ஜூன் முதல் ஜனவரி வரையிலான மாதங்களைத்தான் நீர்ப் பாசனத்துக்காகப் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூட காவிரி நீரைக் கர்நாடக அரசு வழங்கவில்லை. அதனால், அம்மாநில அரசுக்கு உரிய உத்தரவைப் பிறப்பித்து தமிழகத்துக்கு நீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழக அரசு கோரியுள்ளது. மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி புதிதாக ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது. இதைத் தான் வரும் வெள்ளிக்கிழமையன்று பரிசிலிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.












Click it and Unblock the Notifications