கலெக்டர் அலெக்ஸ் படித்த பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை: 1000 மாணவர்கள் பங்கேற்பு
நெல்லை: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட நெல்லையைச் சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடவுள் அருளால் விரைவில் மீட்கப்படுவார் என நெல்லை பள்ளியில் 1000 மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பள்ளி முதல்வர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நெல்லை, தியாகராயந கரைச் சேர்ந்தவர். அவர் 1ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தார். பள்ளியின் பழைய மாணவரான அலெக்ஸ் மாவோயிஸ்ட்டுகளால் கடத்திச் செல்லப்பட்டது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் பிடியில் உள்ள அவர் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று அவர் படித்த பள்ளியில் நேற்று 1000 மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
அப்போது பள்ளி முதல்வர் ஜாய் பெஞ்சமின் பேசியதாவது, மாவோயிஸ்ட்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் ஒரு சிறந்த பேச்சாளர். இளம வயதிலேயே நிர்வாகத் திறமை அவரிடம் பளிச்சிட்டது. அதனால் தான் இந்திய ஆட்சி பணி என்ற உயர்ந்த பதவிக்கு அவரால் வர முடிந்தது. அவர் கடத்திச் செல்லப்பட்டது அனைவரையும் பாதித்துள்ளது. அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும். கடவுள் அருளால் அவர் விரைவில் மீட்கப்படுவார். மத்திய, மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து கலெக்டரை பத்திரமாக மீட்க வேண்டும் என்றார்.
பள்ளி தாளாளர் வெரோனிகா ஜெயராஜ், தமிழ் ஆசிரியர் ராஜாத்தி அசோக், இயற்பியல் ஆசிரியர் ரவிசங்கர் ஆகியோரும் பள்ளியின் முன்னாள் மாணவர் கடத்திச் செல்லப்பட்டதால் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளோம். அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications