ஆந்திரா, கர்நாடக விவிஐபிக்கள் வழிபடும் மெளன சாமியார் மடத்தில் தங்க கிரீடம் திருட்டு!

குற்றாலத்தில் ஸ்ரீசித்தேஸ்வரி பீடத்திற்குச் சொந்தான மெளன சாமியார் மடம் உள்ளது. அங்கு ராஜ ராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கும், மடத்திற்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பெரிய பெரிய விஐபிக்கள் வருவது வழக்கம். ரெட்டி சகோதரர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழக ஆளுநர் ரோசய்யா ஆகியோர் இந்த கோவிலின் நிரந்தர பக்தர்கள் ஆவர்.
ரெட்டி சகோதரர்களுக்கு கர்நாடக அரசியலில் பெரும் பிரச்சினைகள் உருவானபோது இங்கு சிறப்பு பூஜை நடத்தினர். இந்த நிலையில் இந்த ஆலயத்தில் உள்ள ராஜராஜஸ்வரி அம்மன் தலையில் சாத்தப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை இன்று சிலர் அபகரித்து விட்டனர்.
காலை 7 மணி வரை அம்மன் தலையில் கிரீடம் இருந்தது. ஆனால் ஏழரை மணிக்கு பார்த்தபோது கிரீடத்தைக் காணவில்லை. இதையடுத்து ஆலய நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்களுக்குத் தகவல் அளித்தனர். பின்னர் பத்தரை மணியளவில் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. விஜேந்திர பிதாரி உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 50க்கும் மேற்பட்ட போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மிக மிக முக்கிய பிரமுகர்கள் வந்து போகும் ஆலயத்தில் அம்மனின் தங்க கிரீடம் திருட்டுப் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications