திவாகரனுக்கு 5-வது வழக்கில் ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் அளித்துள்ளது.
திவாகரன் மீது நில அபகரிப்பு புகார் உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் 4 வழக்குகளில் திவாகரனுக்கு ஜாமீன் கிடைத்தது. 5 வது வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் திவாகரன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திவாகரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக் பசும்படியார், திருவாரூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர் உள் நோக்கத்துடன் மிரட்டல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து விட்டது. அதனால் திவாகரனுக்கு ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திவாகரன் 30 நாட்களுக்கும் மேல் சிறையில் இருப்பதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகத் தெரிவித்தார்.
திவாகரனுக்கு இன்னும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைக்க வேண்டியுள்ளது. அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்குமா? அல்லது அதற்குள் வேறு ஒரு வழக்கு பாய்ந்து தொடர்ந்தும் சிறையில் இருப்பாரா? என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்












Click it and Unblock the Notifications