மாற்றுத் திறனாளிகளுக்கான தனி ஆதார வளமையம் அமைக்கப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனி ஆதாரவள மையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆதார வளமையம்
மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல், இக்குழந்தைகளின் தேவைகளை பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக மாநில ஆதார வளமையம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும்.
மையத்தின் பணிகள்
இந்த மையத்தின் மூலம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சுகாதாரத் துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் சிறப்பு மருத்துவர்கள், வாழ்வியல் திறன் பயிற்சி வல்லுனர்கள், பேச்சு பயிற்சி வல்லுனர்கள் மற்றும் வெவ்வேறு குறைபாடுகளுக்கான ஆலோசகர்களின் தொழில் நுட்ப உதவிகளை மாற்றுத்திறன் கொண்டவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும்.
மேலும், அவர்களது குறைபாட்டின் தன்மையை முன்னதாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், அதற்குத் தேவையான உபகரணங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவும் இம்மையம் முன்னோடியாக விளங்கும். இது மட்டுமல்லாமல், அரசால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், உதவித் தொகைகள் மற்றும் தேவையான உதவிகளை பெறுவதற்கு இம்மையம் வழிவகை செய்யும். பல்வேறு குறைகளை அறியவும், அவற்றிற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுவதற்குரிய மையங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும், இம்மாநில ஆதார வள மையத்தில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். மேலும், இது குறித்து இந்தியாவில் இருக்கும் அனைத்து மையங்களின் விவரங்களை தொகுத்து ஒரு கையேடு வெளியிடப்படும். இச்சேவை பெற்றோர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக
தனி நூலகம்
அமையும். எல்லா குழந்தைகளையும் போல இக்குழந்தைகளும் புத்தகங்களை படித்து தங்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற எனது நோக்கத்தின் அடிப்படையில், இம்மையத்தில் குழந்தைகளுக்கென பயன்படும் வகையில் தனியாக ஒரு நூலகப் பிரிவு துவங்கப்படும். மேலும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளிடையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்ட மைய நூலகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனிப்பிரிவு தொடங்கப்படும்.
இது, பிற மாவட்ட நூலகங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் இம்மாநில ஆதார வளமையம் மற்றும் அரசால் வழங்கப்படும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி, ஆகியவைகள் இக்குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள வழிவகை செய்து கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications