For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை பெய்கிறதோ இல்லையோ... சட்டசபையில் பாராட்டு மழை பெய்கிறது! - கருணாநிதி கிண்டல்

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மழை பொழிகிறதோ இல்லையோ; பாராட்டு மழைதான் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் பெய்து கொண்டிருக்கிறது, என்று கிண்டலடித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: ஜெயலலிதா ஆட்சியிலே கடந்த ஓராண்டு காலத்தில் வளர்ச்சித் திட்டங்கள்?

பதில்: ஏராளம்! ஏராளம்! இன்னும் இரண்டாண்டுகள் ஆட்சியில் நீடித்தால், அதன் பிறகு ஆண்டு தோறும் நிதி நிலை அறிக்கையே தேவையில்லை என்று கூறிவிட்டு, அதற்குப் பிறகு அன்றாடம் ஜெயலலிதா பேரவை விதி 110-இன் கீழ் அறிக்கை படிப்பார். அதன் மீது பேசுவதற்கு மரபுப்படி வாய்ப்பு இல்லை என்ற போதிலும், தோழமைக் கட்சிகள் எல்லாம் வரிசையாக எழுந்து அந்த 110-வது விதியின்கீழ் படித்த அறிக்கையினை பாராட்டிப் பேசுவார்கள்.

மோனோ ரெயில் திட்டம்

கேள்வி: சென்னையில் மோனோ ரெயில் திட்டத்தை நான்கு வழித் தடங்களில் தொடங்கப் போவதாக மானியக் கோரிக்கையின்போது துறை அமைச்சர் அறிவித்திருக்கிறாரே?

பதில்: மோனோ ரெயில் திட்டம் இப்போது அறிவிக்கப் படுவது அல்ல. 2011-ஆம் ஆண்டில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அ.தி.மு.க. அரசு 3-6-2011 அன்று படித்த ஆளுநர் அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டதாகும். அதைத்தான் நேற்றையதினம் மீண்டும் அந்தத் துறையின் அமைச்சர் ஏதோ புதிய அறிவிப்பு போல செய்திருக்கிறார். ஒப்பந்தப் புள்ளி கோரப்போவதாகச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.

கேள்வி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் தொடர்ந்து மருத்துவமனையில் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்களே?

பதில்: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் தற்போது உண்ணாவிரதம் இருந்து மருத்துவ மனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அரசோ அவர்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. போராட்டக் குழுவினர் தங்களிடம் பேச்சு நடத்த அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ முன்வராத காரணத்தால், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்!

சட்டசபையில் பாராட்டு மழை

கேள்வி: முதல்வர் ஜெயலலிதா அன்றாடம் 110-வது விதியின்கீழ் பேரவையில் அறிக்கை படித்தவுடன் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வரிசையாக எழுந்து முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு பாராட்டுரை வழங்கி வந்ததற்கு மாறாக, தற்போது அமைச்சர்களும் அப்படியே பாராட்டு வழங்க ஆரம்பித்துள்ளார்களே?

பதில்: தோழமைக் கட்சியினரும் பாராட்ட முன் வராவிட்டால் என்ன செய்வது? அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும்தானே பாராட்ட வேண்டும்.

மழை பொழிகிறதோ இல்லையோ; இந்தப் பாராட்டு மழைதான் சட்டப்பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் பெய்து கொண்டிருக்கிறது!

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi sarcastically told that the ruling party members pouring praises on Jayalalithaa in assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X