For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை கறிவேப்பிலையாக்கி தூக்கிப் போட்டார் ஜெ - 2014 தேர்தலில் பலம் காட்டுவோம்! - விஜயகாந்த்

By Shankar
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: என்னை வெறும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி தூக்கிப்போட்டுவிட்டார் ஜெயலலிதா. வரும் 2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

2011 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக- தேமுதிக, அடுத்த சில மாதங்களில் பரம எதிரிகளாக மாறிவிட்டன.

எங்கள் ஆதரவினால்தான் அதிமுக ஜெயித்தது என விஜயகாந்த் போகுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கண்டு கொள்ளாத ஜெயலலிதா, வரும் மக்களவைத் தேர்தலில் யாருடைய கூட்டணியும் இல்லாமல் 40 தொகுதிகளையும் வென்று காட்டுவேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் இல்லாமல் போயிருந்தால் அதிமுக தோற்றிருக்கும் என்று கூறியுள்ளார்.

அந்த பேட்டியின் ஒரு பகுதி:

2011-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஏற்பட்டது. தேர்தலின்போது தே.மு.தி.க. மிகவும் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டது. அதன் காரணமாகத்தான் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

அதிமுக பெற்ற வெற்றியில் எங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ளவும், தேமுதிக வுக்கு உள்ள பலத்தை அறிந்து கொள்ளவும் நீங்கள் 2016-ம் ஆண்டு வர உள்ள தமிழக சட்டசபை தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலிலேயே தேமுதிகவுக்கு உள்ள பலம் என்ன என்பதை நிரூபித்துக் காட்டுவோம். 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. அப்போது என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தேமுதிக பலத்தைக் காட்டும். அது மட்டுமின்றி 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக ஆற்றிய பங்களிப்பை மக்களுக்கு எடுத்துக்காட்டும்.

கடந்த ஆண்டு மக்கள் மனநிலை திமுக ஆட்சிக்கு எதிராக இருந்தது. அதனால் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய லட்சியத்துடன் தேமுதிக செயல்பட்டது. எனவேதான் கண்ணை மூடிக்கொண்டு அதிமுக கூட்டணிக்கு சம்மதித்தேன். அதிமுகவுடன் கூட்டணி சேர நான் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை.

மேலும் எனக்காக நான் எந்த ஒரு சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. சேலத்தில் நடந்த மாநாட்டின்போது எனது கட்சிக்காரர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களது கருத்துக்கு ஏற்ப நான் ஒத்துப் போனேன். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அதிமுக எப்படியெல்லாம் முயன்றார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

என்னை ஒரு நிமிடம் கூட ஓய்வு எடுக்க விடாமல் கூட்டணிக்காக துரத்தினார்கள். என்னை தொடர்பு கொள்ள அதிமுகவினர் எல்லா வழிகளையும் பயன்படுத்தினார்கள். எத்தனை தடவை போனில் பேசினார்கள் என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும்.

தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத ஓட்டுக்கள் இருப்பதாகவும், சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது அந்த கூட்டணியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று பத்திரிகைகள் கணித்திருந்தன. ஆனால் அந்த தேர்தலில் தேமுதிகவை தனித்துப் போட்டியிட வைக்க திமுக-காங்கிரஸ் முயன்றது எல்லாருக்கும் தெரியும். என்றாலும் எனது கட்சிக்காரர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து நான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டேன்.

தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததும் அவர்கள் மாறிவிட்டனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அணுகுமுறை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனவே கூட்டணி முறிவு பற்றி நான் ஆச்சரியம் அடையவில்லை. ஒருவரது தனிப்பட்ட குணம் ஒருபோதும் மாறாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

என்னை கறி வேப்பிலை மாதிரி பயன்படுத்தி விட்டு, பிறகு ஓரத்தில் தூக்கிப்போட்டு விட்டார்கள். சட்டசபை கூட்டத் தொடரில் நான் பங்கேற்காதது பற்றி விமர்சிக்கிறார்கள். சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்துவதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுப்பதில்லை.

சட்டசபை என்பது அடிமைகள் தங்கள் தலைமையை புகழ்ந்து பேசும் சபை போல ஆகி விட்டது. அங்கு போய் நான் என்ன செய்ய முடியும்? மிகவும் முக்கியமான பிரச்சினைகள் மீதுதான் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசிப்பார்கள். ஆனால் தற்போது ஒவ்வொரு துறை மீதான விவாதத்தின் போதும் 110-வது விதியின் கீழ் முதல்வர் அறிக்கை வாசிக்கிறார்.இப்படி செய்தால் அமைச்சரவையில் மந்திரிகள் என்ன நோக்கத்துக்காக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முதல்வர் ஒரு அறிவிப்பு செய்ததும் அது பற்றி புகழ்ந்து, பாராட்டி பேச மட்டுமே உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். விமர்சனம் செய்து பேச யாருக்கும் அனுமதி கொடுக் கப்படுவதில்லை.

இந்த நிலையில் நான் சட்டசபைக்கு வரவில்லை என்று விமர்சிக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது சட்டசபைக்கு வருவதை தவிர்த்தார்கள்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

English summary
DMDK president Vijayakanth vowed that his party would prove its strength in the 2014 generalelections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X