மதுரை ஆதீனத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- தருமபுரம் ஆதீனம்

மதுரையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தில், மதுரை ஆதீன மட மீட்பு ஆலோசனை மாநாடு இன்று நடந்தது. வேளாக்குறிச்சி ஆதீனம், தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் முத்துக்குமார சுவாமி, திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுந்தரமூர்த்தி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி, ஓதுவோர் மூர்த்தி சங்கத் தலைவர் சங்கரா தேசிகர், தேவர் தேசிய பேரவைத் தலைவர் திருமாறன், சாரதா குடில் சங்கரியம்மாள் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
மாநாட்டுக்குப் பின்னர் நெல்லை கண்ணன் கூறுகையில், மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்தியானந்தா உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
இன்று மாலை மதுரை ஆதீன மடத்தில் நாங்கள் வழிபாடு நடத்துவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தருபுரம் ஆதீனம் பேசுகையில், மதுரை ஆதீனம் நியமனத்தில் அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஆதீன மரபுகள் மீறப்பட்டு இருப்பதால், மரபுப்படி நியமிக்கும்படி ஆதீனத்திடம் அரசாங்கம் வலியுறுத்திக் கூறலாம். ஆதீனம் காக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications