கத்காரிக்கு மீண்டும் தலைவர் பதவி- அத்வானி கடும் அதிருப்தி: பாஜக பேரணியை புறக்கணித்தார்!
மும்பை: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கத்காரிக்கு எதிராக அந்த கட்சியில் ஒவ்வொருநாளும் ஒரு தலைவர் போர்க்கொடி தூக்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இப்பொழுது கத்காரிக்கு எதிராக மூத்த தலைவர் அத்வானி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநில ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில் அத்வானி, அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், யஷ்வந் சின்ஹா ஆகியோர் கத்காரியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதற்குப் பின்னர் தேசிய செயற்குழுக் கூட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மோடியின் பரமவைரியான சஞ்சய் ஜோஷிக்கு மீண்டும் கட்சிப் பொறுப்பு கொடுத்ததால் செயற்குழுவைப் புறக்கணிக்கப் போவதாக மோடி கூறியிருந்தார். வேறுவழியில்லாமல் சஞ்சய் ஜோஷியை ராஜினா செய்ய வைத்து மோடியை தேசிய செயற்குழுவில் பங்கேற்க வைத்தனர்.
இதேபோல் கர்நாடக முன்னா முதல்வர் எதியூரப்பாவும் போர்க்கொடி தூக்கியிருந்தார். அவரும் தேசிய செயற்குழுவைப் புறக்கணிப்பேன் என்று கூறியிருந்தார். பின்னர் மோடியைப் பின்பற்றி இன்று அவர் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கத்காரிக்கு 2-வது முறையாக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் கத்காரியை மீண்டும் தலைவராக்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் இந்த ஆதிக்கத்தை மூத்த தலைவரான அத்வானியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்சிக்குள் கோஷ்டி பூசலை வளர்த்துவிடும் கத்காரிக்கு எப்படி மீண்டும் தலைவர் பதவி தரலாம் என்பது அத்வானி தரப்பின் கேள்வி.
இதைத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை மும்பையில் நடைபெற உள்ள பாஜகவின் பேரணியை அத்வானி புறக்கணித்துவிட்டார்.
ஆனால், அவர் பேரணியை புறக்கணிக்கவில்லை என்றும், அதில் அவர் கலந்து கொள்ளுமே திட்டமே இருக்கவில்லை என்றும் பாஜக செய்தித் தொடர்பாளக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications