நடராஜன் வீட்டு திருமணம்: ஆஜராகாத சசிகலா- ஆஜரான அதிமுகவினருக்கு கல்தா!
சென்னை: தஞ்சாவூரில் நடைபெற்ற சசிகலா நடராஜன் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு ரகசியமான சென்ற அதிமுகவினரை கட்சியிலிருந்து பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி ராமச்சந்திரனின் மகன் திருமணம் மே 23-ந் தேதியும், நடராஜனின் தங்கையின் மகள் திருமணம் மே 25-ம் தேதியும் தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க சசிகலா வருவாரா?இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சசிகலா இரண்டு நிகழ்ச்சியையுமே புறக்கணித்துவிட்டார்.
அதேநேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும் இந்த திருமணங்களுக்கு ரகசியமாக சென்று வந்ததாக கூறப்படுகின்றது. அப்படி ரகசியமாக சென்றவர்களுக்கு இப்பொழுது கல்தா கொடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சித் தலைவர் ஆர்.தனசேகர், தஞ்சாவூர் நகராட்சி, 26 வது வார்டு உறுப்பினர் பி.ராஜேஸ்வரன் ஆகியோர் கட்சியின் கொள்கைகளுக்கு முரணான வகையில் செயல்பட்டுள்ளதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதனால், இவர்கள் இருவரும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications