காதலருடன் சேர்ந்து இந்திய வர்த்தகரைக் கடத்திய சீனப் பெண்
பெய்ஜிங்: கடன் பாக்கிக்காக இந்திய வர்த்தகர் ஒருவரை தனது காதலருடன் சேர்ந்து கடத்தினார் சீனப் பெண் ஒருவர். அப்பெண்ணை போலீஸார் கைது செய்து, கடத்தப்பட்ட இந்தியரை மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
சீனாவின் வர்த்தக நகரான யீவு என்ற நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வாரம் இந்த கடத்தல் நடந்துள்ளது.
அந்தப் பெண்ணின் முழுப் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது பெயரின் ஒரு பாதி வாங் என்பதாகும். இவரும் இவரது காதலரும் சேர்ந்து, முகம்மது டேனிஷ் குரேஷி என்ற இந்திய வர்த்தகரை, கடந்த திங்கள்கிழமை, கடத்தினர். பின்னர் அவரை வாங் தனது வீட்டுக்குக் கொண்டு வந்து அடைத்து வைத்தார்.
கடத்தல் குறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் வாங் வீட்டுக்குள் புகுந்து அவரை மீட்டனர். பின்னர் குரேஷி இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
குரேஷி, பைசல் என்ற இந்தியரின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பைசல், வாங்கிடம் பெருமளவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால்திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரைக் கடத்தியதாக வாங் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 30 வயதாகும் வாங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பைசல் தற்போது மும்பையில் உள்ளார். தனது சீன நிறுவனத்திற்கு தனது பிரதிநிதியாக குரேஷியை பைசல் அனுப்பி வைத்திருந்தார். இதை அறிந்த வாங் அவரை ஹோட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசினார். குரேஷியிடமிருந்து கடன் தொகையைப் பெற்றுத் தரக் கோரனார். ஆனால் பைசலிடமிருந்து சரியாக பதில் வராததால் கோபமடைந்து காதலருடன் சேர்ந்து கடத்தி விட்டார்.












Click it and Unblock the Notifications