மலையாள பாடத்தில் மாநிலத்தில் முதலிடம்: வறுமையிலும் சாதித்த மாணவி
மார்த்தாண்டம்: சொந்தமாக வீடின்றி, போதிய பண வசதியின்றி விதவை தாயின் உழைப்பில் படித்த சூரியகோடு புனித எம்ரோம் பள்ளி மாணவி விஷ்ணு பிரியா மலையாள பாடத்தில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கன்னியாகு்மரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகர், பிராகோடைச் சேர்ந்தவர் விஷ்ணு பிரியா. அவர் சூரியகோடு புனித எம்ரோம் எம்எஸ்சி உயர் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் மலையாள பாடத்தில் 97 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மலையாளம் 97, ஆங்கிலம் 69, கணிதம் 86, அறிவியல் 89, ச்மூக அறிவியல் 95 என மொத்தம் 436 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அவரது தந்தை சதிஷ் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். விஷ்ணு பிரியாவின் தாயார் கூலி வேலைக்கு சென்று அவரை படிக்க வைத்துள்ளார்.
சாதனை மாணவி விஷ்ணு பிரியா கூறியதாவது,
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். தாயார் பிந்து மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து என்னை படிக்க வைத்தார். மலையாள பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று விடாமுயற்சியுடன் படித்தேன். மாநிலத்தில் முதல் இடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேல்படிப்புக்கு வசதி இல்லாத நிலையில் எனக்கு அரசோ, தொண்டு நிறுவனங்களோ உதவி செய்தால் வருங்காலத்தில் என்ஜினியர் ஆவேன் என்றார்.












Click it and Unblock the Notifications