11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெறும் சுதாகரன் ஹெராயின் வழக்கு!
சென்னை: ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கடந்த ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டு, திமுக ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஹெராயின் வழக்கு உயிர்ப்பெற்றுள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன் சுதாகரன் மீது பதிவு செய்யப்பட்ட 2 போதை பொருள் வழக்குகளுக்கு ஒரே குற்றப்பத்திரிகையை புதிதாக அரசு வக்கீல் தாக்கல் செய்தார்.
சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரனிடம் உதவியாளராக இருந்தவர் கோபு ஸ்ரீதர். இவர், சென்னை பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சுதாகரன் தன்னை துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் சுதாகரன் மீது போலீசார் கொலை முயற்சி உட்பட பல சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டில் 13.6.01 அன்று சோதனை நடத்தினர்.
படுக்கையடியில் ஹெராயின்...
அப்போது சுதாகரன் படுக்கை அறையில், 16 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் சுதாகரன் மீது பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்ட சுதாகரனின் நண்பர் வி.பாஸ்கரன் என்ற தோட்டம் பாஸ்கரன் கோர்ட்டில் சரணடைந்தார்.
பின்னர் போலீஸ் காவலில் கொடுத்த வாக்குமூலத்தில், 'சுதாகரனுக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இந்த போதை பொருட்களை சலாவூதீன், மொய்னுதீன்ஆகியோர் வாங்கிக் கொடுக்கின்றனர்' என்று குறிப்பிட்டார்.
மற்றொரு வழக்கு
இதனடிப்படையில் சுதாகரன், தோட்டம் பாஸ்கரன், சலாவூதீன், மொய்னுதீன் ஆகியோர் மீது பாண்டி பஜார் போலீசார் போதை பொருள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், அபிராமபுரத்தில் உள்ள தோட்டம் பாஸ்கரன் வீட்டில் கடந்த 2001 ஜுன் 28-ந் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 72 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து சுதாகரன், தோட்டம் பாஸ்கரன், சலாவூதீன், மொய்னுதீன் ஆகியோர் மீது அபிராமபுரம் போலீசார் தனியாக மற்றொரு போதைப்பொருள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த 2 வழக்குகளில் பிடிபடாமல் சலாவூதீன் தலைமறைவாகிவிட்டார். மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.
2 குற்றப் பத்திரிகைகள்
இந்த வழக்குகளை விசாரணை நடத்திய பாண்டி பஜார், அபிராமபுரம் போலீசார் தனித்தனியாக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் சென்னை போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சுதாகரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், 2 வழக்குகளில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஒரே குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
புதிய குற்றப்பத்திரிகை
இந்தநிலையில் போதைப் பொருட்கள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை கோர்ட்டு நீதிபதி ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சுதாகரன் உட்பட 3 பேர் மீதான 2 ஹெராயின் வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே குற்றப்பத்திரிகையை புதிதாக அரசு தரப்பு வக்கீல் தாமல் கண்ணன் நேற்று தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ராமமூர்த்தி வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications