மத்திய அரசாவது பெட்ரோல் விலையை குறைத்தது, ஜெ. அரசு எதை குறைத்தது? கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: தேர்தல் ஆணையரை நியமிக்கக்குழு வேண்டும் என்று பிரதமருக்கு அத்வானி கடிதம் எழுதியிருப்பதாகச் செய்தி வந்துள்ளதே?
பதில்: எனக்குக்கூட அந்தக் கடிதத்தில் உள்ள கருத்துகளில் உடன்பாடுதான். எதிர்க்கட்சியின் கருத்து என்பதால் அலட்சியப்படுத்தப்படக்கூடிய கருத்து அல்ல. அத்வானி தனது கடிதத்தில் தேர்தல் ஆணையர், கணக்குத் தணிக்கை அதிகாரி, மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்ய இப்போதுள்ள நடைமுறை மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெறவில்லை என்றும், தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பதவிகள் அதிமுக்கியமானது என்றும், அவர்களைத் தேர்வு செய்யும் முறை மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும் என்றும், எனவே அந்தத் தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், பிரதமர் தலைமையில், சட்ட அமைச்சர், இந்திய தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் குழுவிலே இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். பிரதமரும், மத்திய அரசும் இந்தக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
கேள்வி: பெட்ரோல் விலை முழுவதையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும், 2 ரூபாய் மட்டும் குறைத்திருப்பது கண்துடைப்பு நாடகம் என்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையைக் குறைக்கலாம், மாநில அரசு நினைத்தால் பெட்ரோலுக்கு விற்பனை வரியைக் குறைக்கலாம், பால்விலை உயர்வை, பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யலாம், இரண்டு அரசுகளில் யார் முதலில் மக்களுக்காக உதவி செய்ய முன் வருகிறார்கள் என்று பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் மத்திய அரசுதான் முதலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்திருக்கிறார்கள். மேலும் மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலுக்கு 14 ரூபாயும், ஒரு சிலிண்டருக்கு 500 ரூபாயும் மானியமாகக் கொடுத்து, மக்களின் சுமையில் ஓரளவு பங்கேற்கிறது. ஆனால் மாநில அரசு எதையும் குறைக்க முன் வராமல், மத்திய அரசு செய்ததை கண்துடைப்பு நாடகம் என்று அறிக்கை விடுகிறார்கள்.
எது கண்துடைப்பு நாடகம் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.
கேள்வி: நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து தாங்கள் உருக்கமாக கடிதம் எழுதிய பிறகும், மாநில அரசு அதிலே தலையிட்டதாகத் தெரிய வில்லையே?
பதில்: நல்லவேளையாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று, வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. பேச்சுவார்த்தை என்றதும், மாநில அரசுதான் இதிலே தலையிட்டு உதவி செய்து, பிரச்சனை முற்றுப் பெற்றிருக்கிறதோ என்று எண்ணிச் செய்தியைப் படித்தபோது, மத்திய தொழிலாளர் நல ஆணையமும், என்.எல்.சி. நிர்வாகமும், தொழிற்சங்கத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத்தான் செய்தி வந்திருக்கிறதே தவிர, கடைசிவரை மாநில அரசின் அமைச்சர்களோ, முதல்வரோ அதில் தலையிடவே இல்லை.
கேள்வி: தமிழக அரசு சார்பில் பணி நியமனம் செய்வதில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்திருக்கிறாரே?
பதில்: உண்மைதான். அதனால்தான் திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது அதைக் கடைப்பிடிக்கவில்லை போலும். தமிழக அரசின் சார்பில் 1,300 மருத்துவர்களை ஒப்பந்த முறையிலே நியமனம் செய்ததாகவும், அதிலே ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை என்றும் அதைப்போலவே விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்றும் செய்திகள் வந்துள்ளன. தமிழக அரசு இதே போக்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்காமல், மற்ற வேலைவாய்ப்புகளிலும், தொழிற்கல்வியில் மாணவர்களை அனுமதிப்பதிலும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கென வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாகக் கடைப்பிடித்து நிறைவேற்றிடுவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: புதுக்கோட்டையில் உங்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டியிருந்த வாழ்த்துப் போஸ்டர்களையெல்லாம் காவல்துறையினரே கிழித்திருக்கிறார்களே?
பதில்: அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவே இல்லை. ஆனால் கழகப் போஸ்டர்கள் காவல் துறையினரால் கிழித்து எறியப்பட்டுள்ளன.
தேமுதிக நிர்வாகிகள் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி அதிமுகவினர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடலாமா என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தபோது, புகாரின் பேரில் மாவட்ட வர்த்தகக்கழகத் தலைவர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துவிட்டு, தேர்தல் விதிகளை மீறி அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களைப்பெற்ற அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
கேள்வி: போதிய நிதி இல்லாமல் சிந்துவெளி ஆய்வுகள் தேங்கும் நிலை ஏற்பட்டு ஆய்வாளர்கள் கவலை அடைந்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே?
பதில்: சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையத்தோடு இணைந்துள்ள 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சிந்துவெளி ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கிட முன்வர வேண்டுமென்று விரும்புகிறேன்.
கேள்வி: அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதன் காரணமாக அவசர சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் 5 பேர் இதுவரை பலியாகியிருப்பதாகவும் செய்திகள் வருகிறதே?
பதில்: வேலைநிறுத்தம் தொடங்கி மூன்று நாட்கள்தானே ஆகின்றன. ஜுன் 12ம் தேதி புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடியட்டும்; அதற்குப் பிறகு பொதுமருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் பற்றி நேரம் இருந்தால் கவனிப்பார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications