இந்தி திணிப்பு எதிர்ப்பு கேலிச்சித்திரத்தை உடனே நீக்க மத்திய அரசுக்கு ஜெ. வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
1965ம் ஆண்டிற்குப் பிறகு இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் அப்போதைய மத்திய அரசின் முயற்சியை இந்தி மொழி பேசாத மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், இதனை எதிர்த்து திராவிட இயக்கம் மிகப் பெரிய போராட்டத்தினை நடத்தியது.
இந்தப் போராட்டத்தினையடுத்து ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளுமே தொடர்ந்து மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக இருக்கும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு ஒரு காரணமாயிருந்த, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் வெளியாகியுள்ள கேலிச் சித்திரம், மொழிப்போர் தியாகிகளை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தி திணிப்பு போராட்டம் குறித்து தமிழர்களின் மனதினை புண்படுத்தும் வகையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பன்னிரண்டாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கேலிச் சித்திரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications