சி.வி.சண்முகம் உறவினர் கொலை-பாமக மாஜி எம்.பி. தன்ராஜ் சிபிஐயால் கைது!
சென்னை: அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜை சிபிஐ கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு அன்று இரவு திண்டிவனத்தில் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டுக்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சண்முகம் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால் அவரது உறவினரும், அதிமுக நிர்வாகியுமான முருகானந்தம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரர் சீனுவாசன், சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்ட கருணாநிதி, சீனுவாசன் மகன் சுரேஷ் (36) உள்ளிட்ட 12 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் சேகரிடம் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் சேகர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்டுகின்றது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பாமக முன்னாள் எம்.பி. தன்ராஜை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications