ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காட்டுவதே கருணாநிதி தான்: கே.என். நேரு

திருச்சி மாவட்டம் பைத்தம்பாறை கிராமத்தில் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான கே.என். நேரு பேசியதாவது,
அதிமுக அரசு என் மீது 9 கொலை முயற்சி வழக்குகள் போட்டுள்ளது. மேலும் 12 ஆண்டுகள் அமைச்சராகவும், 30 ஆண்டுகளாக சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் மீது 5 பொய் வழக்குகள் போட்டதுடன் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எனற எதிர்கட்சிகளின் பொய்க் குற்றச்சாட்டிற்கு நாம் மக்களிடம் உரிய விளக்கம் அளிக்காதது தான் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தோற்றதற்கு காரணம்.
திமுகவினர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் திமுகவை யாராலும் அழித்துவிட முடியாது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் அதிமுக இன்னும் நிறைவேற்றவில்லை. ஜெயில் சிங் காலத்தில் இருந்தே குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் தகுதியானவர் என்பதை கருணாநிதி அடையாளம் காட்டி வருகிறார். அதன்படி தற்போது பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார்.
தனது தம்பி கே.என். ராமஜெயம் கொல்லப்பட்ட பிறகு கே.என். நேரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியது இது தான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications