ஸ்டாலின் மருமகள் குரலில் மோசடி செய்தவர் கைது: சிக்குகிறார் திமுக மகளிர் அணி செயலாளர்?
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகள் கிருத்திகா உதயநிதி ஸ்டாலினின் குரலில் பேசி மோசடி செய்து வந்தவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா குரலில் பேசி யாரோ மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த மோசடிக்கு அவர் பொறுப்பில்லை என்று கூறி வழக்கறிஞர் ரமன்லால் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்தி மோசடி செய்பவரை கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கிருத்திகாவின் குரலில் பேசி மோசடி செய்த தினேஷ்குமார்(21) என்பவர் திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டில் போலீசாரிடம் சிக்கினார். அவரைப் பிடிக்க சினிமா இணை இய்ககுனர் குமரேசன் என்பவர் போலீசாருக்கு உதவினார். தினேஷ்குமார் குமரேசனை ஏமாற்றி ரூ.50,000 ரொக்கத்தை மோசடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினேஷ்குமாரிடம் பணத்தை இழந்த குமரேசன் திருவல்லிக்கேணி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டினம் எனது சொந்த ஊராகும். நான் சினிமாவில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். ஒளி, வசந்தம் வந்தாச்சு, சைவப்பூனை போன்ற படங்களுக்கு நான் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். சென்னை புழல், கன்னடபாளையத்தில் குடும்பத்தோடு வசிக்கிறேன்.
சமீபத்தில் ஒருநாள், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் பேசுவதுபோல எனது செல்போனில் ஒருவர் பேசினார். எனது கணவரின் பட நிறுவனமான "ரெட்ஜெயண்ட் மூவிஸ்'' தயாரிக்கும் படங்களில் உங்களுக்கு இணை இயக்குனர் பொறுப்பு தரப்படும், இது தொடர்பாக எனது தம்பி உங்களிடம் பேசுவான் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டனர்.
இது பற்றி எனது கணவர் (உதயநிதி ஸ்டாலின்) மற்றும் மாமனாரிடம் (மு.க.ஸ்டாலின்) எதுவும் பேசி விடாதீர்கள் என்றும் போனில் பேசியவர் தெரிவித்தார்.
இதை அடுத்து கிருத்திகா உதயநிதியின் தம்பி இன்பநிதி பேசுகிறேன் என்று இன்னொருவர் என்னிடம் போனில் பேசினார். அவர் இணை இயக்குனர் பதவி தருவதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று குறிப்பிட்டார். இதை உண்மை என்று நம்பி நானும் ரூ.50,000 பணத்தை முன்பணமாக கொடுத்துவிட்டேன். மீதி ரூ.50,000 பணத்தை கேட்டு இன்பநிதி என்று பேசிய நபர் தொடர்ந்து போனில் பேசி தொல்லை கொடுத்து வந்தார். இதற்கிடையில் கிருத்திகா உதயநிதி பெயரில் மோசடி நடப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து நான் உஷாராகி மீதி பணத்தை கொடுக்கவில்லை.
நான் ஏற்கனவே கொடுத்த ரூ.50,000 பணத்தை திருப்பிக்கேட்டேன். அந்த பணத்தை திருப்பித் தருவதாக, திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டுக்கு வருமாறு என்னை இன்பநிதி என்று பேசியவர் அழைத்தார். அவ்வாறு பணத்தை வாங்க வந்தபோது தான் மோசடி நபர் தினேஷ்குமார் பிடிபட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய ரூ.50,000 பணத்தை வசூலித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தினேஷ் குமார் என்ற குமாரை கைது செய்தனர். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த அவர் பலகுரலில் பேசும் திறன் கொண்டவர். தனது திறமையைப் பயன்படுத்தி மோசடி செய்து வந்துள்ளார்.
அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
எனது இந்த குரல் மோசடி மற்றும் பண மோசடிக்கு திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஒருவர் தான் பின்னணியில் இருந்தார். அவரது தூண்டுதலின் பேரில்தான் நான் இந்த குரல் மோசடி செய்தேன். அவரது சகோதரி ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தனது சகோதரியை பார்க்க வரும்போது அவர் எனக்கு பழக்கமானார்.
கிருத்திகா உதயநிதியை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தபோது அவரது குரலை எனது மனதில் பதிவு செய்து கொண்டேன். அதன் பிறகு திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் கேட்டுக் கொண்டபடி கிருத்திகா உதயநிதி பெயரில் பேசி மோசடிக்கு துணை போனேன்.
இதுபோல பேசி 6 முன்னாள் அமைச்சர்களிடம் வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரியங்களை அந்த மகளிர் அணி செயலாளர் சாதித்துள்ளார். எனது இந்த மோசடி பேச்சுக்கு எனது ஊரைச் சேர்ந்த எனது நண்பன் மணியும் உறுதுணையாக இருந்தான். இதற்காக எனக்கு மாதம் ரூ.7,000, மணிக்கு மாதம் ரூ.5,000 சம்பளமாக கொடுக்கப்பட்டது. மகளிர் அணி செயலாளர் இந்த தொகையை கொடுத்து வந்தார். சினிமா இணை இயக்குனர் குமரேசனிடம் நானாக இந்த மோசடியில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
குமார் சொல்வது போன்று அந்த திமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மோசடியில் ஈடுபட்டது உண்மை தானா என்பதை அறிய அவருக்கு சம்மமன் அனுப்பி வரவழைத்து விசாரிக்கவிருக்கிறார்கள். உண்மை என்று தெரிய வந்தால் அவர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே குமாருக்கு துணைபோன மணி நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
குமாரின் தந்தை ராமசச்ந்திரன் தற்போது உயிரோடு இல்லை. அவரது தாய் ராஜலட்சமி ஸ்ரீரங்கம் கோவிலில் துப்புறவு பணியாளராக உள்ளார். தங்கை ரேவதி பிளஸ் 1 படிக்கிறார்.












Click it and Unblock the Notifications