ஸ்டிரைக் செய்த டாக்டர்கள்: வெறிச்சோடிய மருத்துவமனைகள்
நெல்லை: ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் மருத்துவ சங்க டாக்டர்கள் 12 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மத்திய அரசால் நடத்தப்படும் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற பின்னர் தான் மருத்துவராக பணிபுரிய முடியும் என்னும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசின் உரிமையை பறிக்கும் தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதாவை வாபஸ் பெற வேண்டும். கிராமப்புற மக்களுக்கு மூன்றரை வருட பி.ஆர்.எச்.சி. மருத்துவப் படிப்பை உருவாக்கும் முறையை கைவிட வேண்டும். போலி மருத்துவர்களை ஒழிக்க தனி மசோதா நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்களை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, தூததுக்குடி மாவட்டங்களில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 1,500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 750 தனியார் மருத்துவமனைகளில் 12 மணி நேர மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. புறநோயாளிகள் பிரிவு முற்றிலுமாக இயங்கவில்லை. ஆனால் அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் பிற்பகலில் நெல்லை அரசு மருத்துவமனை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications