தட்கல் முறைகேடுகளை தடுக்க முன்பதிவு நேரத்தில் மாற்றம்- இனி காலை 10 மணிக்கு முன்பதிவு!

ரயிலில் அவசரமாக பயணம் செய்வோருக்காக ஒரு நாள் முன்னதாக தட்கல் முறையில் முன்பதிவு செய்து கொள்ளப்படுகிறது. இந்த முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். இதற்காக இரவு முதலே ரயில் நிலையங்களில் பயணிகள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில்வே ஊழியர்களும் தட்கல் டிக்கெட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்ததால் தட்கல் டிக்கெட் முறையின் பலன் பயணிகளை சென்றடையவில்லை.
பல்வேறு ஊடகங்களும் இந்த முறைகேடுகளை பலமுறை அம்பலப்படுத்தியும் பயனில்லாத நிலையை நீடித்தது.
இந்நிலையில் பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் தட்கல் முன்பதிவு நேரத்தை ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்து உள்ளது. இனி காலை 8 மணிக்குப் பதில் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் ரயில்வே நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். பகல் 12 மணிக்குத்தான் முகவர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், தட்கல் முன்பதிவுக்கு தனியாக கவுண்ட்டர் திறக்கப்படும். அந்த கவுண்ட்டரில், டிக்கெட் எடுப்பவர்களை கண்காணிக்க ரகசிய கேமராவும் பொருத்தப்படும். தட்கல் முன்பதிவு கவுண்ட்டரில் பணியாற்றச் செல்லும் ஊழியர்கள், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 677 ரெயில்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. கடந்த ஆண்டு (2011-12) மட்டும் தட்கல் முன்பதிவு மூலம் ரெயில்வேக்கு ரூ.847 கோடி வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications