மெரினா பீச்சில் வாக்கிங் போனவர்களிடம் மதுவிலக்கு பிரச்சாரம் செய்த ராமதாஸ்: துண்டு பிரசுரங்கள் வழங்கி
சென்னை: மெரினா கடற்கரையில் வாக்கிங் போனவர்களிடம் மது விலக்கு குறித்து துண்டு பிரசுரங்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
பாமக சார்பில் மாநில அளவில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுவினால் ஏற்படும் கேடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று பாமக பிரச்சாரம் மேற்கொண்டது. இன்று காலை 6 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே பிரச்சாரத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் துவக்கி வைத்தார். காலை நேரத்தில் கடற்கரையில் வாக்கிங் சென்றவர்களிடம் மது ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாமக சார்பில் வரும் 11ம் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடக்கவிருக்கிறது. அந்த போராட்டத்தின் அவசியத்தை எடுத்துக் கூறி மக்களின் ஆதரவை திரட்டவே இந்த விழிப்புணர்வு பிரச்சாரம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் 28 வயதைத் தாண்டியவர்கள் மது குடிப்பதைப் பார்த்தோம். ஆனால் இன்றோ 13 வயது சிறுவர்கள் எல்லாம் குடிக்கிறார்கள்.
மதுவால் இளைஞர் சமுதாயம் பாழாகி, வீணடிக்கப்படுகிறது. திராவிடக் கட்சிகளோ மக்கள் எக்கேடு கென்னால் என்ன மது விற்பனையில் கிடைக்கும் வருவாயை வைத்து இலவசங்களைக் கொடுத்து ஓட்டு வாங்கினால் போதும் என்று இருக்கின்றன. 1989ம் ஆண்டு பாமக துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மது விலக்கிற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். சார்வாதிகாரி ஆகும் வாய்ப்பு கிடைத்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்ற காந்தியடிகளின் கூற்றுப்படி நாங்கள் போராடி வருகிறோம். அண்ணா, பெரியார் வழியில் வந்த திராவிடக் கட்சிகளோ அவர்களின் கொள்கைகளை மறந்து மது விற்பனையில் ஈடுபட்டுள்ளன.
மதுக்கடை திறக்க மாட்டோம் என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் அவரது கொள்கையைப் பின்பற்றும் திமுக தலைவர் கருணாநிதியோ மது விற்பனைக்கு காரணமாக இருந்தார். மது விற்பனையாகாவிட்டால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள். மது விற்பனையில் கிடைக்கும் வருவாயை விட 2 மடங்கு அதிக வருவாய் ஈட்டும் திட்டங்கள் எங்களிடம் உள்ளது. அதை அரசிடம் தெரிவி்த்தும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மதுவினால் ஏற்படும் கேடுகளை கருத்தில் கொண்டு மக்கள் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications