ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்க இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம்- அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி

கர்நாடக முதல்வர் பொறுப்பிலிருந்து சதானந்த கவுடா விலகிய நிலையில் புதிய முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிக்கப்பட்டார். அவரை அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுப்பதற்காக கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பாஜக மேலிடப் பிரதிநிதிகள் ராஜ்நாத் சிங் மற்றும் அருண்ஜேட்லி ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக எம்.எல்.ஏக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி கர்நாடக பாஜகவில் எதியூரப்பா, சதானந்த கவுடா, ஈஸ்வரப்பா ஆகிய 3 கோஷ்டிகள் உள்ளன. அதாவது லிங்காயத்து, ஒக்கலிகா, குருபா சமூகத்தினர்தான் அமைச்சரவைப் போட்டியில் இருக்கின்றனர். மூன்று சமூகத்தினருக்கும் அமைச்சரவையில் உரிய இடம் கொடுத்தாக வேண்டிய நிலை உள்ளது. இல்லையெனில் இன்னொரு பஞ்சாயத்தை பாஜக எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
முதல்வர் மாற்றத்தைப் போல் இழுத்தடிக்காமல் அமைச்சர் பதவிகளை சுமூகமாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
