பெண்ணிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர்: தர்ம அடி கொடுத்த பயணிகள்
நாகர்கோவில்: நாகர்கோவில் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மாலை வேளை என்பதால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் நின்று கொண்டிருந்தனர். பேருந்து மார்த்தாண்டம் வந்ததும் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதில் ஏறி முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கண்டக்டர் வினு டிக்கெட், டிக்கெட் என கேட்டுக் கொண்டே பேருந்தில் இங்கும், அங்கும் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளம்பெண்ணை 2,3 தடவை இடித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் சற்று சமாளித்து கொண்டு அந்த பெண் நின்று கொண்டிருந்தார்.
திடீரென அந்த இளம்பெண் அருகே போய் நின்ற வினு அவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். கண்டக்டரின் செய்கையால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். உடனே அருகில் இருந்த பயணிகள் நடந்ததை புரிந்து கொண்டு கண்டக்டரை சுற்றி வளைத்தனர். சிலர் ஆத்திரத்தில் அவரை தாக்கவும் செய்தனர். நாகர்கோவில் வரும் வரை அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து அழுது கொண்டே இருந்தார். பேருந்து வடசேரி பேருந்து நிலையம் வந்ததும் பயணிகள் கண்டக்டரை சுற்றி வளைத்து தாக்கினர். பின்னர் அவரை வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கண்டக்டர் வினுவிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications