For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உழைப்பாளிக்கு (ஜெ) ஒரே கவலை, ஓய்ந்து கிடப்பவருக்கோ (கருணாநிதி) பல கவலை: அமைச்சர் முனுசாமி

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha and Karunanidhi
சென்னை: சென்னையில் குடிநீர் தேவை மீது முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி தனி அக்கறையுடன் புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி வருவதால் சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை நிச்சயம் ஏற்படாது என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், இதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என்றும், கலந்து பேசி விரைந்து முடிவெடுக்கவில்லை என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சென்னை நகரின் குடிநீர்த் தேவையை ஈடுசெய்ய தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு பெரிய திட்டத்தையும் உருவாக்காத கருணாநிதி, தங்கக் குடத்தைப் பார்த்து தகரக் குவளை இளித்த கதையாக, தமிழக அரசைக் குறை கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை மாநகரை புதிய வீராணம் திட்டம் தந்து மீட்டெடுத்தவர் முதல்வர் என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி.

சென்னைப் பெருநகரின் தொடர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதன் வருங்கால குடிநீர்த் தேவையை மனதில் எண்ணி, சீரிய முறையில் ஆய்வு செய்து 2002ம் ஆண்டிலேயே புதிய வீராணம் திட்டத்தை அம்மா உருவாக்கினார். இந்தத் திட்டம் வெற்றி பெறாது, செயல்படுத்த முடியாது, வீராணம் தண்ணீர் சென்னைக்கு வராது என்று அன்றைக்கு பொருமித் தள்ளினார் கருணாநிதி.

ஆனால், எந்த தண்ணீரைக் கொண்டு வரமுடியாது என்று கருணாநிதி கூறினாரோ, எந்த திட்டம் வெற்றி பெறாது என்று திமுகவினர் கூறினார்களோ அதன் மூலம் கிடைத்த தண்ணீரைத்தான் அவர்கள் இன்றைக்கு குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தண்ணீரின் தேவை குறித்து மக்களுக்கு உணர்த்தி, மழை நீரை வீணாகாது சேகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் உருவாக்கி மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியவர் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

மக்கள் அனைவரும் ஈடுபடும் வகையில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கட்டாயமாக்கி, சட்டம் இயற்றி, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் முதல்வர் அம்மா. இந்தியாவுக்கே ஒரு முன்னோடியாக இத்திட்டத்தை முதல்வர் அம்மா செயல்படுத்தினார்.

சென்னை நகருக்கு ஒரு நிரந்தர குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற தொலைநோக்குடன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அம்மா உருவாக்கினார். மீஞ்சூரில் அமைந்துள்ள கடல் நீரை குடி நீராக்கும் நிலையம் மூலம் சென்னை நகருக்கு நாளொன்றுக்கு 100 மில் லியன் லிட்டர் தண்ணீர் தருகின்ற திட்டத்தை 2003ம் ஆண்டில் முதல்வர் அம்மா தலைமையிலான அரசு தான் உருவாக்கியது.

மேலும் சென்னை விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் மேலும் ஒரு நிலையத்தை சென்னையின் தென் பகுதியில் அமைக்க முதல்வர் அம்மா ஆணையிட்டு, அதற்கான கலந்தறிதற்குரியவரை நியமித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் சென்னை நகரின் குடிநீர்த் தேவையை ஈடு செய்யும் வகையில் தற்போதுள்ள நீர் சேமிப்புக்கான கொள்ளளவை மேலும் 4.20 டி.எம்.சி அதிகரித்திட 1851 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சேமிப்பு ஏரிகளை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள ஏரிகளை மறுசீரமைத்தும் ஆழப்படுத்தியும் கொள்ளளவை அதிகரித்திடவும் அம்மா ஆணையிட்டு உள்ளார்.

இதன்படி திருவள்ளூர் மாவட்டம் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை பகுதியில் 1 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட ஒரு புதிய நீர்த்தேக்கத்தை ரூ.330 கோடி மதிப்பீட்டில் உருவாக்கிட முதலமைச்சர் அம்மா ஆணையிட்டு அதன் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்துடன் திருகண்டலம், இராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் சேமிப்பு ஏரிகள் உருவாக்கிடவும் நேமம், போரூர், அய்யம்பாக்கம், அம்பத்துடர், கொரட்டுர், மாதவரம் ஆகிய ஆறு ஏரிகளில் 0.9 டி.எம்.சி கூடுதலாக தண்ணீர் சேகரிக்கும் வகையில் மறுசீரமைக்கவும், சோழவரம் ஏரியில் 0.3 டி.எம்.சி கூடுதலாக தண்ணீர் சேகரிக்கும் வகையில் அதனை ஆழப்படுத்தவும் முதல்வர் அம்மா ஆணையிட்டுள்ளார்.

மேலும், புதிதாக உருவாக்கப்படும் கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்திலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வகையில் பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல சுமார் 165 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 45 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்க முதலமைச்சர் அம்மா ஆணையிட்டுள்ளார்.

அம்மா ஆட்சிக்கு வரும் காலங்களில் எல்லாம் சென்னையின் குடிநீர்த் தேவை மீது சிறப்பு கவனம் செலுத்தி, தனி அக்கறையுடன் புதிய நீராதாரங்களை உருவாக்கியும் புதிய குடிநீர்த் திட்டங்களைத் தொடங்கியும் வருகிறார்கள் என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாகும்.

தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட சென்னை மாநகராட்சியில் எவ்வாறு தடையின்றி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்பதை தமிழக அரசு கவலைப்படவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

சென்னைக் குடிநீர் வாரியம், ஏரிகள் முதலான நீராதாரங்கள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஆகியவற்றின் மூலம் சென்னை நகருக்கு தற்போது நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறது. இதில், 810 மில்லியன் லிட்டர் குழாய்கள் மூலமாகவும், 20 மில்லியன் லிட்டர் லாரிகள் மூலமாகவும் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியுடன் தற்போது 42 உள்ளாட்சி அமைப்புகள் கூடுதலாக இணைந்துள்ளதால் சென்னை குடிநீர் வாரியத்தின் செயலாக்கப்பகுதி 174 சதுர கிலோ மீட்டரிலிருந்து 426 சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மா ஆணைப்படி இப்பகுதிகளுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான உடனடி மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டங்களை சென்னை குடிநீர் வாரியம் முழுமையாக நிறைவேற்றும் வரை இப்பகுதிகளுக்கு குழாய்கள் மற்றும் லாரிகள் மூலமாகவும் குடிநீர்த் தொட்டிகள் மூலமாகவும் மற்றும் புதிய குடிநீர் நிரப்பும் நிலையங்கள் மூலமாகவும் குடிநீர் வழங்கிவருகிறது. இதன்படி மாநகராட்சியுடன் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் லிட்டர் எவ்வித தடையுமின்றி சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது.

புதியதாக இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கத்திவாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளுக்கான குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. போரூர் பகுதிக்கான குடிநீர்க் கட்டமைப்புப் பணிகள் அம்மா தலைமையிலான அரசால் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் 7 பகுதிகளுக்கான குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் அம்மா ஆணைப்படி மீதமுள்ள 32 பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ள ரூ 700 கோடி மதிப்பீட்டில் திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மதுரவாயல், ஆலந்தூர், அம்பத்தூர், உள்ளகரம் புழுதிவாக்கம் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளுக்கான குடிநீர்த் திட்ட பணிகள் ரூ.464 கோடி மதிப்பீட்டில் 2008 2011 வரையிலான காலத்தில் மந்தகதியில் நடைபெற்று வந்தன. அம்மா தலைமையில் ஆட்சி அமைந்ததும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டு அனைத்து பணிகளும் வேகமாக நடைபெறுவதால் 2013ம் ஆண்டு மார்ச் திங்களில் இத்திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

கருணாநிதி குறிப்பிட்டுக் காட்டியுள்ள அம்பத்தூர் மண்டலத்தைப் பொறுத்தமட்டில், நகராட்சியாக செயல்பட்டு வந்த அப்பகுதி அண்மையில்தான் சென்னை மாநகராட்சியோடு இணைந்தது.

இவ்வாறு இணைந்ததைத் தொடர்ந்து அம்பத்துடர் மண்டலத்தில் குடிநீர் வசதி மேம்படுத்தித் தரவேண்டும் என்று அம்மா ஆணையிட்டவாறு, 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 526 குடிநீர்த் தொட்டிகள் புதிதாக நிறுவப்பட்டு நாளொன்றுக்கு 16 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ள ராம்நகர், விநாயகபுரம், ஒரகடம், பாடி, கொரட்டுர் ஆகிய பகுதிகளில் மட்டும் இவ்வகையில் 72 குடிநீர்த் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. நகராட்சியாக செயல்பட்டு வந்த அம்பத்தூர் மண்டலம் சென்னை மாநகராட்சியோடு இணைந்த பிறகு நாளொன்றுக்கு கூடுதலாக 20 லட்சம் லிட்டர் சேர்த்து, புதிதாக நிறுவப்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள், லாரிகள் ஆகியவற்றின் மூலமாக, தற்போது மொத்தம் நாளொன்றுக்கு 160 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அம்பத்தூர் பகுதிக்கான குடிநீர்த் திட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் 2012 நவம்பர் மாதம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும்.

சென்னை மாநகர் மட்டுமல்லாது அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட, செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் முழுத் திறனான நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கொண்டு செல்வதற்கென 2000 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட இரண்டாவது இணைக் குழாய் அமைக்கும் திட்டத்தை 41.35 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தவும், பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பு முதல் தாம்பரம் வரை 1200 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய் அமைக்கும் திட்டத்தை 93.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தவும் அம்மா அரசு ஆணையிட்டுள்ளது.

அம்மா ஆணையின்படி, சென்னை மாநகரின் குடிநீர் நிலைமை குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். மாநகரின் குடிநீர் நிலைமை சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனரால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உழைப்பாளிக்கு தனது கடமையை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமே என்று ஒரே கவலை. ஆனால், ஓய்ந்து கிடப்பவருக்கோ எந்தக் குட்டையைக் குழப்பலாம், எப்படி எல்லாம் குழி பறிக்கலாம் என்று பல கவலை. இப்படிப் பல கவலைகளின் விளைவாக எழுந்ததுதான் தமிழக அரசு கவலைப்படவில்லை என்ற கருணாநிதியின் குற்றச்சாட்டு.

கருணாநிதியின் காழ்ப்புணர்ச்சியால் எழுப்பப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டை தமிழக மக்கள் ஒருக்காலும் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

English summary
As CM Jayalalithaa led ADMK government is taking many steps to improve the water suppy in Chennai the city will not face any issue that front, said local administration minister K.P. Munusamy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X