ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான அருண் செளரிக்கு எதிரான வழக்கை கைவிட்டது சிபிஐ!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அருண் சௌரிக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. கைவிட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., 2001 முதல் 2007-ம் ஆண்டு வரை நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்தும் விசாரணை செய்தது. இதில் மறைந்த பிரமோத் மகாஜன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறனின் பதவிக்காலத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, 2003 ஜனவரி முதல் 2004 மே மாதம் வரை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக அருண் சௌரி இருந்தபோது நடைபெற்ற அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போது, முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை, தொலைத்தொடர்புச் சேவையை மேம்படுத்துவதற்காகவே பின்பற்றப்பட்டது தெரிய வந்தது. அதாவது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்யத் தயங்கிய வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளிலையே இந்த முறையில் பெரும்பாலான உரிமங்கள் வழங்கப்பட்டன. ஆக, அருண் சௌரியின் பதவிக்காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முதற்கட்ட விசாரணை துவங்கி 19 மாதங்களுக்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications