நாமக்கல் அருகே 7 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு கழுத்தறுத்து கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயமானாள். இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டி அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கோனேஸ்வரன் (40). அவர் கோழித்தீவன மில்லில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஜெயசீலி. அவர்களின் குழந்தைகள் கோகுல் (10), அட்சயா (9), ஸ்ரீஜா என்கிற ஸ்ரீநிதி (7). நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஜெயசீலி சந்தைக்கு சென்றுவி்ட்டார். கோனேஸ்வரன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
மாலை 4 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீநிதி மாயமானாள். உடனே கோனேஸ்வரன் மற்றும் உறவினர்கள் சிறுமியைத் தேடி அலைந்தனர். இந்நிலையில் இரவு 7.30 மணிக்கு நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள பாலத்தின் அடியில் ஸ்ரீநிதி ஆடையின்றி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாகக் கிடந்தாள். இதைப் பார்த்த கோனேஸ்வரன், ஜெயசீலி ஆகியோர் கதறி அழுதனர்.
ஸ்ரீநிதியை காணாமல் தேடிக் கொண்டிருக்கையில் பாலத்திற்கு அடியில் அவளைக் காணவில்லை என்று அதே முகாமைச் சேர்ந்த கருணா என்ற வாலிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாலத்தின் அடியில் சிறுமியின் உடல் கிடைத்ததையடுத்து கோனேஸ்வரனின் உறவினர்கள் கருணாவை நையப் புடைத்தனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருணாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பதை அறிய அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications