பல மாணவிகளுடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியர்... மனைவி கொலையில் புதுத் தகவல்!
சென்னை: சென்னை அருகே மனைவியை கொலை செய்து கால்வாயில் புதைத்து விட்ட பொறியியல் கல்லூரி பேராசிரியர் குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பல மாணவிகளுடன் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவரது சகவாசம் சரியில்லாததால் ஏற்கனவே ஒரு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.
அவருடன் தொடர்பு வைத்துள்ள மாணவிகளில் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மூலம் தான் பேராசிரியர் தனது மனைவியைக் கொலை செய்தது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பேராசிரியருடன் தொடர்பு வைத்துள்ள மற்ற மாணவிகளையும் பிடித்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கள்ளக்காதலைப் பொறுத்தவரை படிச்சவனும் இப்படித்தான் இருக்கிறான், படிக்காதவனும் இப்படித்தான் இருக்கிறான். கள்ளக்காதல் என்றாலே கடைசியில் அது கொலையில்தான் போய் முடிகிறது. சென்னை அருகே, தனது கள்ளக்காதலைக் கண்டுபிடித்து விட்ட மனைவி மீது அச்சம் கொண்ட பொறியியல் கல்லூரி பேராசிரியர், அவரைக் கொலை செய்த கொடுமை மக்களை உலுக்கி எடுத்துள்ளது.
அந்தப் பேராசிரியர் பெயர் நடராஜன். வயது 32தான் ஆகிறது. சென்னை படப்பையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. நாமக்கல் மாவட்டம் அரசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி படித்துள்ளார்.
திருமணம் நடந்தபோது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால், திருமணத்திற்குப் பின்னரும் தனது தாய் வீட்டிலேயே தங்கி படிப்பை தொடர்ந்தார் விஜயலட்சுமி. அதுதான் தப்பாகப் போய் விட்டது.
மனைவி ஊரில் இருந்ததால், நடராஜன் மட்டும் படப்பை கல்லூரியில் பணியாற்ரிக் கொண்டு காட்டுப்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஜூன் 6ம் தேதி திருமணத்திற்காக போய் விட்டு வருவதாக கூறிச் சென்ற விஜயலட்சுமி அதன் பிறகு வரவில்லை. இதையடுத்து நடராஜனுக்கு தகவல் தெரிவித்தனர் விஜயலட்சுமியின் பெற்றோர். அவர் பரமத்தி வேலூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு நடராஜன் மீது திடீரென சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர். போலீஸாருக்கும் நடராஜனின் போக்கு குறித்து சந்தேகம் தட்டுப்படவே தீவிர விசாரணைக்குட்படுத்தினர்.
மேலும் விஜயலட்சுமியின் செல்போனை ஆராய்ந்தபோதுதான் அவர்களுக்கு வலுவான துப்பு கிடைத்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல், தான்தான் விஜயலட்சுமியைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் நடராஜன்.
கள்ளக்காதல்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் தெரிய வந்தது. மனைவியைக் கொலை செய்த நடராஜன், காட்டுப்பாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே கிருஷ்ணா கால்வாயில் புதைத்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் விஜயலட்சுமியின் உடலைத் தோண்டியெடுத்தனர். பெரிய பாறாங்கல்லைப் போட்டு உடலை மூடி வைத்திருந்தார் நடராஜன். உடல் அழுகிப் போய்க் காணப்பட்டது. எலும்புக் கூடாக இருந்தது. இதையடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனையை டாக்டர்கள் நடத்தினர்.
ஏன் இந்தக் கொலை...?
நடராஜன் கூறியதிலிருந்து சில பகுதிகள்...
என்னுடைய கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்துவிட்டதால் அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். எனது நண்பன் ஒருவன் ரகசியமாக காதல் திருமணம் செய்யப்போகிறான். எனவே நீ மட்டும் வா என்று, எனது மனைவியை கடந்த 6-ந்தேதி அழைத்திருந்தேன். அதன்படி சென்னை தாம்பரத்திற்கு வந்த விஜயலட்சுமியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டில் சிறிது நேரம் மனைவியிடம் அன்பாக பேசிக்கொண்டு இருந்தேன். இன்னும் சற்று நேரத்தில் சாகப்போகிறோம் என்பதை அறியாத அவள் என்னிடம் மகிழ்ச்சியாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள். அதற்கு முன்பாகவே வீட்டில் இருந்து சற்று தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான கிருஷ்ணா கால்வாய் அருகே கடப்பாரை மற்றும் மண்வெட்டி போன்ற ஆயுதங்களை தயாராக மறைத்து வைத்து இருந்தேன்.
வீட்டில் கொலை செய்தால் சத்தம் கேட்டு மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து நள்ளிரவு 12 மணி அளவில் மனைவியிடம் நைசாக பேசி வெளியே காற்றோட்டமாக சென்று வரலாம் என்று கூறி அழைத்து வந்தேன். சிறிது தூரம் சென்றதும் மனைவியின் வாயைப் பொத்தி கழுத்தை கத்தியால் அறுத்தேன். விஜயலட்சுமி ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்ததும் அவளுடைய மார்பில் கத்தியால் ஓங்கி குத்தியதும் இறந்துவிட்டாள்.
அதன்பிறகு அவசர அவசரமாக அங்கு பள்ளம் தோண்டி விஜயலட்சுமியின் உடலை போட்டு, முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலை பகுதியில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப்போட்டுவிட்டு போய் விட்டேன் என்று கூறியுள்ளார்.
மாணவியை மனைவியாக்கிய கொடுமை
இந்த நடராஜன் மிகப் பெரிய கிரிமினல் போலத் தெரிகிறது. காரணம், ஊர் உலகுக்கு விஜயலட்சுமியை கல்யாணம் செய்து கொண்ட இவர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒரு மாணவியைத்தான் தனது மனைவியாக கல்லூரி வட்டாரம், தான் குடியிருந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் காட்டியுள்ளார்.
கல்லூரிக்கு கிருஷ்ணகிரி மாணவி அடிக்கடி வந்து நடராஜனைப் பார்த்துச் செல்வாராம். மேலும், காட்டுப்பாக்கம் வீட்டிலும் கூட அந்த மாணவியுடன்தான் குடும்பம் நடத்தி வந்துள்ளார் நடராஜன். திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவருக்கும் உறவு இருந்திருக்கிறது.
அப்போதே அந்த மாணவியை பெங்களூருக்கு அடிக்கடி கூட்டிக் கொண்டு போய் உல்லாசமாக இருந்துள்ளார். விஜயலட்சுமியைத் திருமணம் செய்த பிறகும் கூட இந்தக் கள்ளத் தொடர்பைத் தொடர்ந்துள்ளார். திரு்மணத்திற்குப் பிறகும் விஜயலட்சுமி தனது ஊரிலேயே தங்கிப் படித்து வந்தது நடராஜனுக்கு ரொம்ப வசதியாகப் போய் விட்டது. தனது வீட்டிலேயே வைத்து அந்த மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இவர் குடியருந்த வீட்டு உரிமையாளருக்குக் கூட அந்த மாணவிதான் மனைவி என்று தெரியுமாம். இந்த நிலையில் கணவரை சந்திக்க வந்த விஜயலட்சுமி, வீட்டில் இருந்தபோது வீட்டு உரிமையாளர் குழப்பமாகி நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி, நான்தான் நடராஜனின் மனைவி என்று தெரிவித்துள்ளார்.
அதைக் கேட்டு வீட்டு உரிமையாளருக்கு குழப்பமாகி விட்டதாம். அப்படியானால் இதுவரை இங்கு குடும்பம் நடத்தியது யார் என்று கிருஷ்ணகிரி மாணவி குறித்துக் கூறியுள்ளார். அப்போதுதான் தனது கணவரின் கள்ளக்காதலும், இரட்டை வாழ்க்கையும் விஜயலட்சுமிக்குத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர் வேலை பார்த்த கல்லூரிக்குப் போய் விசாரித்துள்ளார். அங்குதான் நடராஜனின் நிழல் வாழ்க்கை விஜயலட்சுமிக்கு முழுமையாக விளங்கியுள்ளது.
இதனால்தான் அதிர்ச்சி அடைந்து மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து விட்டார் நடராஜன்.
பல மாணவிகளுடன்
நடராஜனுக்கு கல்லூரி மாணவிகளிடம்தான் அதிக அளவில் அக்கறை இருந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது பல மாணவிகளை தனது வலையில் வீழ்த்தியுள்ளாராம். இதை அறிந்த கல்லூரி நிர்வாகம அவரை உடனே வேலையை விட்டு நீக்கி விட்டது. அந்த மாணவிகளில் ஒருவர்தான் கிருஷ்ணகிரி மாணவி.
அதன் பிறகுதான் இந்த படப்பை கல்லூரிக்கு வந்து சேர்ந்தார். இங்கும் தனது லீலையை காட்டியுள்ளார். இங்கும் பல மாணவிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
மார்க் அதிகம் போடுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறிய பல மாணவிகளை தனது காமத்திற்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் நடராஜன்.
மாணவிகள் மட்டுமல்லாமல் சில பேராசிரியைகளும் கூட நடராஜனின் லீலையில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த தற்போது போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
நடராஜனை மேலும் தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications